பா.ஜ.,வினர் அறிவுரை தேவையில்லை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் காட்டம்
பா.ஜ.,வினர் அறிவுரை தேவையில்லை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் காட்டம்
ADDED : ஜூலை 09, 2024 03:57 AM

பெங்களூரு : ''அரிசி வாங்க கர்நாடக அரசிடம் பணம் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேட்டை காங்கிரஸ் அரசு மூடி மறைப்பதாக பா.ஜ.,வினரும், முதல்வர் பதவி எதிர்பார்ப்பவர்களால் தான், இந்த முறைகேடு வெளியில் வந்ததாக குமாரசாமியும் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வழக்கை போலீசார் விசாரிக்கின்றனர். எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு தேவையில்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளோம்.
ரேணுகாசாமி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வர். இவ்வழக்கில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. மாநிலத்தை ஆட்சி செய்ய எங்களையும், மத்தியில் அவர்களை ஆட்சி தேசிய ஜனநாயக கூட்டணியினரையும் மக்கள் அனுமதித்துள்ளனர்.
மாநிலத்தில் நிதி நெருக்கடி என்று நாங்கள் கூறவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற, 56,000 கோடி ரூபாய் செலவிடுகிறோம். வாக்குறுதியை நாங்கள் கவனித்து கொள்வோம். இதில், பா.ஜ.,வினரின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை.
அரிசி வாங்க, மாநில அரசிடம் பணம் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகிறார். இது தொடர்பாக அவர் ஒரு கடிதம், எங்களுக்கு எழுதட்டும். அதற்கு எப்படி பதில் அளிப்போம் என்பது அவருக்கு தெரியும்.
காங்கிரஸ் தலைவர்கள், டில்லியில் மேலிட தலைவர்களை சந்தித்தோம். ஆனால், மாநில முதல்வர் மாற்றம், கூடுதல் துணை முதல்வர்கள் விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

