கட்சி தாவிய எம்.எல்.ஏ.,வால் குடைச்சல் பி.ஆர்.எஸ்., தலைவர்களுக்கு வீட்டு காவல்
கட்சி தாவிய எம்.எல்.ஏ.,வால் குடைச்சல் பி.ஆர்.எஸ்., தலைவர்களுக்கு வீட்டு காவல்
ADDED : செப் 14, 2024 01:14 AM
ஹைதராபாத், தெலுங்கானாவில், பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத் ராஷ்ட்ர சமிதியில் இருந்து விலகி காங்கிரசில் சமீபத்தில் இணைந்த எம்.எல்.ஏ., அரேகாபுடி காந்தி வீட்டில் கட்சிக்கூட்டம் நடத்த இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர்களை போலீசார் நேற்று வீட்டு காவலில் வைத்தனர்.
தெலுங்கானாவின் செரிலிங்கம்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ., அரேகாபுடி காந்தி. இவர், பாரத் ராஷ்ட்ர சமிதியில் இருந்து சமீபத்தில் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து, தெலுங்கானா சட்டசபையின் பொதுக்கணக்கு குழு தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இதை, 'அரசியல் சாசன படுகொலை' என, விமர்சித்த பி.ஆர்.எஸ்., தலைவர் சந்திசேகர ராவ், இந்த பதவி எதிர்க்கட்சியினருக்கு தான் வழங்கப்படுவது வழக்கம் என, தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., காந்தி, 'நான் எதிர்க்கட்சியை சேர்ந்தவன் தான்' என, கிண்டல் அடித்தார்.
'அப்படியானால், காந்தி என் வீட்டுக்கு வரட்டும், அவரை பி.ஆர்.எஸ்., தலைமையகத்துக்கு அழைத்து செல்கிறேன்' என, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., கவுஷிக் ரெட்டி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து தன் ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ., காந்தி, நேற்று முன்தினம் கவுஷிக் ரெட்டி வீட்டுக் சென்றார். அப்போது, இருதரப்புக்கும் மோதல் வெடித்தது. அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தாவிய எம்.எல்.ஏ., காந்தி வீட்டுக்கு சென்று கூட்டம் நடத்தப்போவதாக பி.ஆர்.எஸ்., தலைவர்கள் அறிவித்தனர்.
இதனால் பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ., கவுஷிக் ரெட்டி, மேட்சல் மாவட்ட தலைவர் சம்பிபுர் ராஜு உட்பட பல மூத்த தலைவர்கள் நேற்று வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.