தங்கவயலில் 'ஏர் பிளாஸ்ட்' அதிர்வால் குலுங்கிய வீடுகள்
தங்கவயலில் 'ஏர் பிளாஸ்ட்' அதிர்வால் குலுங்கிய வீடுகள்
ADDED : ஆக 08, 2024 11:51 PM
தங்கவயல்,: தங்கவயலில் பல ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் சுரங்க பகுதியில் பயங்கர சப்தத்துடன், 'ஏர் பிளாஸ்ட்' ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகள் குலுங்கின.
தங்கச் சுரங்கம் மூடப்பட்டு 24 ஆண்டுகளாகின்றன. பல சுரங்கங்களில் ஊற்று நீர் சுரந்து நிரம்பியுள்ளது. அதே நேரத்தில், சுரங்க பாறைகளுக்கு இடையே காற்றழுத்தம் அதிகளவு ஊடுருவும் போது, 'ஏர் பிளாஸ்ட்' ஏற்படுவதும் உண்டு. இதனால் நில அதிர்வு ஏற்படும்.
தங்கச் சுரங்கம் மூடப்பட்ட 24 ஆண்டுகளில் எப்போதாவது, 'ஏர் பிளாஸ்ட்' ஏற்படுவதுண்டு. இதனால் நில அதிர்வு மட்டுமே உணர முடியும். பாதிப்பு ஏற்பட்டதில்லை.
இந்நிலையில், தங்கவயலில் பல ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் சுரங்க பகுதியில் பயங்கர சப்தத்துடன் நேற்று, 'ஏர் பிளாஸ்ட்' ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகள் குலுங்கின.
நில அதிர்வை ஏற்படுத்திய ஏர் பிளாஸ்ட், எந்த இடத்தில் ஏற்பட்டது என்பதை அறியும், 'சீஸ்மோ' தொழில்நுட்ப கருவி தங்கவயலில் இருந்தது. அதை, வேறிடத்துக்கு எடுத்து சென்று விட்டனர்.
எனவே, நேற்று ஏர் பிளாஸ்ட் ஏற்பட்ட சுரங்க இடத்தையும், அதிர்வு அளவையும் அறிய வாய்ப்பின்றி போனது.