வீட்டு பெண் உரிமையாளர் கொலை வாடகைக்கு இருந்த இளம்பெண் கைது
வீட்டு பெண் உரிமையாளர் கொலை வாடகைக்கு இருந்த இளம்பெண் கைது
ADDED : மே 16, 2024 12:13 AM

பெங்களூரு: கடனை அடைப்பதற்காக, வீட்டின் பெண் உரிமையாளர் கழுத்தை நெரித்து கொன்று, நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு கெங்கேரி கோனசந்திராவில் வசிப்பவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா, 40. கெங்கேரி சாட்டிலைட் டவுன் சிவன்பாளையாவில், குருமூர்த்தி சலுான் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 10ம் தேதி வீட்டில் தனியாக இருந்த, திவ்யாவின் கழுத்தை நெரித்து கொன்ற மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 36 கிராம் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கெங்கேரி போலீசார் விசாரித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், குருமூர்த்தி வீட்டில் வாடகைக்கு இருந்த, கோலாரை சேர்ந்த மோனிகா, 24, என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, திவ்யாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
மோனிகா கால்சென்டரில் வேலை பார்த்தார். தன்னை மாடர்னாக காட்டி கொள்வதற்காக, விலை உயர்ந்த ஆடைகளையும், 'மேக்கப்' பொருட்களையும் வாங்கி உள்ளார்.
இதில், அவருக்கு கடன் அதிகரித்தது. கடனை அடைக்க சிரமப்பட்டார். இந்நிலையில், திவ்யா வீட்டில் அதிக நகை, பணம் இருப்பது மோனிகாவுக்கு தெரிந்தது.
திவ்யாவை கொன்று, நகைகளை கொள்ளையடிக்க திட்டம் போட்டார். கடந்த 10ம் தேதி காலை, அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உள்ளே சென்று, திவ்யாவின் பின்பக்கமாக சென்று கழுத்தை நெரித்து, கொலை செய்துள்ளார்.
பின், திவ்யா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றார். அதன்பின் ஒன்றும் தெரியாதது போல, நாடகமாடியது விசாரணையில் தெரிந்தது.
மோனிகா வசித்த வீட்டிற்கு வாலிபர் ஒருவர், அடிக்கடி வந்து சென்றுள்ளார். குருமூர்த்தி வீட்டிற்கு வாடகைக்கு வரும்போது, அந்த வாலிபரை தன் கணவர் என்று மோனிகா கூறி இருந்தார். ஆனால், அந்த வாலிபர் மோனிகாவின் கணவர் இல்லை, காதலன் என்று தெரிந்தது.
திவ்யா கொலையில் அந்த வாலிபருக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.