UPDATED : செப் 16, 2024 12:37 AM
ADDED : செப் 15, 2024 11:59 PM

ஜெசலேம்: ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேல் மத்திய பகுதியில் உள்ள திறந்தவெளி பகுதியில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த தாக்குதலை, ஹவுதி படையினர் நடத்தினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 11 மாதங்களுக்கும் மேல் மோதல் நடக்கிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்பது பேர் காயம்
ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர், அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனில் இருந்து நேற்று காலை ஏவப்பட்ட நீண்ட துார ஏவுகணை, இஸ்ரேலின் மத்திய பகுதியில் விழுந்தது. நல்ல வேளையாக, திறந்த வெளியில் விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
ஏவுகணை சத்தத்தை கேட்டு, பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் ஓடினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.
இஸ்ரேலின் மத்திய பகுதியில் லோட் நகரில் உள்ள பென் குரியான் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அருகில் இருந்த ரயில் நிலையத்தின் எஸ்கலேட்டர் சேதமடைந்தது. இந்த தாக்குதலால், விமான சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
ஏவுகணை தடுப்பு அமைப்பு
இந்த தாக்குதலை ஹவுதி படையினர் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ஹவுதி அமைப்பினரின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ள பதிவில், 'இஸ்ரேலை குறிவைத்து, 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை, இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பால் தகர்க்கப்பட்டன.
'ஒரு ஏவுகணை மட்டும் இஸ்ரேலை தாக்கியது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.