குருவை ஏமாற்றிய கெஜ்ரிவால் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?: ராஜ்நாத் சிங் கேள்வி
குருவை ஏமாற்றிய கெஜ்ரிவால் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?: ராஜ்நாத் சிங் கேள்வி
UPDATED : மே 23, 2024 03:21 PM
ADDED : மே 23, 2024 12:57 PM

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால், அவரது குரு அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர், மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்? என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் மே 25ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பிரசாரம் களை கட்டியுள்ளது. டில்லியில் துவாரகா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: வாக்குறுதிகளை ஆம் ஆத்மி ஒருபோதும் நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத, டில்லி அரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்க தகுதியில்லை. கெஜ்ரிவால், அவரது குருவான அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?.
பெரிய மஹால்
குருவின் பேச்சை மீறி புதிய அரசியல் கட்சியை கெஜ்ரிவால் உருவாக்கினார். டில்லியை லண்டனைப் போல மாற்றுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியினர் சொன்னார்கள். நம் நாடு இப்போது லண்டனை விட மிகவும் முன்னேறி உள்ளது. யமுனை நதியை சுத்தப்படுத்துவதாக ஆம்ஆத்மி கட்சியினர் உறுதியளித்தனர். ஆனால் யமுனை நதியை சுத்தம் செய்தார்களா?. கெஜ்ரிவால் முதல்வர் இல்லத்தில் வசிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார். இருப்பினும், அவர் தனக்காக பெரிய மஹால் கட்டினார்.
பி 'டீம்'
ஆம்ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஏதும் பேசாமல் கெஜ்ரிவால் அமைதியாக இருந்தார். நீண்ட நாட்களாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. காங்கிரசின் பி 'டீம்' ஆக ஆம் ஆத்மி செயல்படுகிறது. அயோத்தியில் ராமர் கூடாரத்தில் இருந்து அரண்மனைக்கு சென்றுள்ளார். பாரதம் நிச்சயமாக 'ராம ராஜ்ஜியம்' எழுச்சியை பெறும். இதனை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

