'எனக்கு எப்படி சீட் கிடைத்தது?' அமைச்சரின் மகள் ஆச்சரியம்!
'எனக்கு எப்படி சீட் கிடைத்தது?' அமைச்சரின் மகள் ஆச்சரியம்!
ADDED : ஏப் 18, 2024 04:13 AM

பெலகாவி, : ''தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை,'' என, சிக்கோடி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா கூறி உள்ளார்.
லோக்சபா தேர்தலில் சிக்கோடி தொகுதியில் பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மகள் பிரியங்கா போட்டியிடுகிறார். சிக்கோடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சிக்கோடி மக்களிடம் இருந்து, எனக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்கள், என்னிடம் வந்து, அவர்களின் பிரச்னைகளை கூறுகின்றனர். என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். கர்நாடக அரசியல் அரங்கில் என்னை விட வயதில், இரண்டு மடங்கு மூத்தவர்கள் உள்ளனர்.
அரசியல் ஆளுமைகள் உள்ள களத்தில், நானும் இருப்பது சவாலாக உள்ளது. ஆனால், சவாலை சந்திக்க தயாராக உள்ளேன். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை.
வாய்ப்பு கிடைத்து இருப்பதை, நேர்மறையாகப் பார்க்கிறேன். என்னை போன்ற இளம்பெண்ணுக்கு, இது பெரிய தேர்தல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் என் குடும்ப உறுப்பினர்கள் 30 ஆண்டுகளாக அரசியலில் உள்ளனர். அவர்கள் ஆசியால் எம்.பி., ஆவேன் என்று, நம்பிக்கை உள்ளது.
எம்.பி.,யாகி லோக்சபாவில் என் முதல் குரல், வேலைவாய்ப்பு பற்றி தான் இருக்கும். இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும்படி, அரசிடம் கோரிக்கை வைப்பேன். சிக்கோடி விவசாயம் சார்ந்த பகுதி. விவசாயத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் எம்.பி., ஆன பின், நீர்ப்பாசனத்திற்கு அதிகமுக்கியம் கொடுப்பேன்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், மாநில மக்கள் நிம்மதியாக இருப்பதை பார்க்கிறேன். அரசின் ஐந்து வாக்குறுதிகள் எனக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

