ரசிகர் ரேணுகாசாமி கொலையானது எப்படி? தர்ஷன், பவித்ரா கவுடா பரபரப்பு வாக்குமூலம்!
ரசிகர் ரேணுகாசாமி கொலையானது எப்படி? தர்ஷன், பவித்ரா கவுடா பரபரப்பு வாக்குமூலம்!
ADDED : ஜூன் 15, 2024 04:28 AM

பெங்களூரு: ரசிகர் கொலையான சம்பவம் குறித்து, நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உள்ளிட்ட பலர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன், 47. இவரது தோழி பவித்ரா கவுடா, 34. இவருக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சாமி, 33 என்பவர் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.
கடந்த 8 ம் தேதி, சித்ரதுர்காவில் இருந்து ரேணுகா சாமியை, பெங்களூரு அழைத்து வந்து ஆர்.ஆர். நகர் பட்டனகரே செட்டில் வைத்து, நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா, தர்ஷனின் ரசிகர்கள் தாக்கி கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக அன்னபூரணேஸ்வரி நகர் போலீசார் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 13 பேரை கடந்த 11ம் தேதி கைது செய்திருந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் 4 பேர் கைது
இந்நிலையில் ரேணுகா சாமியை சித்ரதுர்காவிலிருந்து பெங்களூருக்கு டாக்சியில் கடத்தி சென்ற கார் டிரைவர் ரவி என்பவர், கடந்த 13ம் தேதி போலீசில் சரணடைந்தார். இந்த கொலையில் மேலும் நான்கு பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து, காமாட்சி பாளையாவுக்கு ரேணுகாசாமியின் உடலை எடுத்து செல்ல, தர்ஷனின் ரசிகரான புனித் என்பவர் கார் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் புனித், அவரது நண்பர் ஹேமந்த் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் சித்ரதுர்காவை சேர்ந்த அனுகுமார், ஜெகதீஷ் ஆகியோரும் நேற்று கைதாகினார். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்புகள் அகற்றம்
இதற்கிடையில் நடிகர் தர்ஷனை காண அவரது ரசிகர்கள் போலீஸ் நிலையம் முன்பு, குவிவதை தடுக்க சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. ஆனால் தர்ஷனுக்கும், அவருடன் கைதானவர்களுக்கும் சகல வசதிகள் செய்து கொடுப்பது வெளியே தெரியாமல் இருக்க சாமியான பந்தல் போடப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அன்னபூரனேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. போலீஸ் நிலையம் முன்பு இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டதால் போலீசாருக்கு எதிராக ஆக்ரோஷம் வெளிப்படுத்தினர். இதையடுத்து, நேற்று இரும்பு தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் விசாரணையின் போது பவித்ரா கவுடா, தர்ஷன், பவன், ராகவேந்திரா, நந்திஸ் ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
செருப்பால் அடித்தேன்
பவித்ரா கவுடா அளித்த வாக்குமூலம்: எனக்கு ரேணுகாசாமி ஆபாச குறுந்தகவல் அனுப்புவது பற்றி, எங்கள் வீட்டில் வேலை செய்த பவனிடம் கூறினேன். இது பற்றி தர்ஷனிடம் கூற வேண்டாம். அவரிடம் கூறினால் பிரச்னை பெரிதாகிவிடும் என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் அவர் தர்ஷனிடம் சொல்லிவிட்டார்.
ரேணுகாசாமியை பெங்களூரு அழைத்து வந்திருப்பது பற்றி அறிந்ததும், பட்டனகரே செட்டிற்கு சென்றேன். எனக்கு எதற்காக ஆபாச குறுந்தகவல் அனுப்பினாய் என்று ரேணுகாசாமியிடம் கேட்டு அவரை செருப்பால் அடித்தேன். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டேன். கொலை செய்வர் என்று தெரிந்திருந்தால், ரேணுகா சாமி மீது போலீசில் புகார் அளித்திருதிருப்பேன்.
தர்ஷன்: பவித்ராவுக்கு, ரேணுகா சாமி ஆபாச குறுந்தகவல் அனுப்பியது பற்றி பவன் மூலம் எனக்குத் தெரிந்தது. இதனால் அவருக்கு புத்திமதி கூற நினைத்தேன். சித்ரதுர்காவிலிருந்து அவரை பெங்களூரு அழைத்து வர கூறியது நான்தான். இனி இப்படி செய்யக்கூடாது. செய்தால் வேறு மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துவிட்டு புறப்பட்டு சென்றேன்.
பவன்: ரேணுகாசாமி ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியது பற்றி, பவித்ரா என்னிடம் கூறினார். பவித்ரா பேசுவது போன்று ரேணுகாசாமியிடம் சமூக வலைதளங்களில் பேசினேன்.
அவரிடமிருந்து மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டேன். பின்னர் தர்ஷனிடம் கூறினேன். ரேணுகாசாமியை பெங்களூர் அழைத்து வந்து தாக்கினோம். அவர் சுருண்டு விழுந்தார். மயங்கி விழுந்து இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ராகவேந்திரா: தர்ஷன் கூறியதால் ரேணுகா சாமியை சித்ரதுர்காவிலிருந்து பெங்களூருக்கு அழைத்து வந்தேன். இங்கு வந்ததும் அவரைப் பிடித்து தாக்கினார். இதனால் அவரது வாய், காதிலிருந்து ரத்தம் வழிந்தது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
நந்திஸ்: ரேணுகாசாமியை பெங்களூரு அழைத்து வந்து அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று, தர்ஷன் என்னிடம் அடிக்கடி கூறினார். இதனால் சித்ரதுர்கா மாவட்ட தர்ஷன் ரசிகர் மன்ற சங்க தலைவர் ராகவேந்திராவை தொடர்பு கொண்டு, ரேணுகாசாமியை கண்காணிக்க கூறினேன். ராகவேந்திரா மூலம் ரேணுகாசாமியை இங்கு அழைத்து வந்து தாக்கினோம். அவர் உயிரிழப்பார் என்று நினைக்கவில்லை.
தர்ஷனை காப்பாற்ற
அமைச்சர் முயற்சி?
இந்த கொலை வழக்கில் பவித்ரா கவுடா வை ஏ1, தர்ஷனை ஏ2 ஆக போலீசார் சேர்த்துள்ளனர். ஆனால் இந்த வழக்கிலிருந்து அவர்களை தப்பிக்க வைக்கும் வகையில், பவித்ரா கவுடா வை ஏ 16, தர்ஷனை ஏ17 ஆகவும் மாற்றும்படி, அன்னபூரனேஸ்வரி நகர் போலீசாருக்கு, செல்வாக்குமிக்க அமைச்சர் ஒருவரிடம் இருந்து தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
'உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என இந்த வழக்கு எங்கு நடந்தாலும், தர்ஷனை வெளியில் கொண்டு வருவோம். தர்ஷனை ஏ17 ஆக சேர்த்தால், அவருக்கு எளிதில் ஜாமின் கிடைக்கும்' என்றும், போலீசாரிடம், அந்த அமைச்சர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாயில் பிரியாணி திணிப்பு
சித்ரதுர்காவிலிருந்து ரேணுகாசாமி பெங்களூரு அழைத்து வந்த பின்னர், தர்ஷனின் ரசிகர்கள் பிரியாணி சாப்பிடும் படி ரேணுகா சாமியிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர் நான் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை. சைவ உணவுகள் தான் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் தர்ஷன் வந்துவிடுவார். அவரிடம் அடி வாங்க உனது உடம்பில் தெம்பு வேண்டாமா என்று கேட்டு, ரேணுகா சாமி வாயில் வலுக்கட்டாயமாக பிரியாணியை திணித்துள்ளனர்.
21 ஆதாரங்கள் சேகரிப்பு
ரேணுகாசாமி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தர்ஷன் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால் அவருடன் இருந்தவர்கள், 'மர்ம உறுப்பில் தர்ஷன் தாக்கியதால் தான் ரேணுகாசாமி இறந்தார்' என்று கூறியுள்ளனர். இதனால் தர்ஷனுக்கு எதிரான ஆவணங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். மொபைல் போன் டவர், கொலை நடந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ரேணுகாசாமியின் ரத்த மாதிரி, தர்ஷனின் ஆதரவாளர் பிரதோஷ் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட 30 லட்சம் ரூபாய் உட்பட 21 ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
குற்றவாளி தந்தை உயிரிழப்பு
சித்ரதுர்காவின் சிஹினூர் கொண்டா அருகில் வசித்தவர் சந்திரண்ணா, 60, இவரது மகன் அனுகுமார், நடிகர் தர்ஷனின் கூட்டாளி. ரேணுகாசாமி கொலையில் தொடர்புடைய அனுகுமாரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மகன் கைதான அதிர்ச்சியில், சந்திரண்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஏமாற்றி அழைத்து வந்தனர்
சித்ரதுர்கா மாவட்ட தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திரா, ரேணுகாசாமியிடம் சென்று, பவித்ராவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியது பற்றி கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர், 'தர்ஷன் உன்னிடம் பேச வேண்டுமாம். நீ பெங்களூரு வா. உனக்கு எச்சரிக்கை மட்டும் விடுப்பார். பின்னர் தர்ஷன் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்' என்று கூறி ஏமாற்றி அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.

