ADDED : ஏப் 10, 2024 01:11 AM
புதுடில்லி, 'நடப்பு ஆண்டின் ஜூன் முதல் செப்., வரையிலான பருவமழை காலத்தில், நாட்டில் சராசரியான மழைப் பொழிவு இருக்கும்' என, தனியார் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏப்., முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் வழக்கமாக நான்கு முதல் எட்டு நாட்கள் வரையே அனல் காற்று வீசுவது வழக்கம்.
இந்த முறை அது 10 முதல் 20 நாட்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் எச்சரித்தது.
இதை தொடர்ந்து ஆறுதலான தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
நடப்பு ஆண்டு பருவமழை காலம் குறித்து, 'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
வரும் ஜூன் முதல் செப்., வரையிலான பருவமழை காலத்தில், நீண்ட கால சராசரியான அளவுக்கு 86.88 செ.மீ., அளவுக்கு 102 சதவீத பருவமழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

