பா.ஜ.,வுக்கு எத்தனை தொகுதியில் வெற்றி கிட்டும்?: கெஜ்ரிவால் கணிப்பு
பா.ஜ.,வுக்கு எத்தனை தொகுதியில் வெற்றி கிட்டும்?: கெஜ்ரிவால் கணிப்பு
ADDED : மே 16, 2024 11:34 AM

லக்னோ: 'பா.ஜ., 250 தொகுதிகளுக்கு குறைவாகவே வெற்றி பெறும்' என டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது: நான்கு கட்ட ஓட்டுப்பதிவிற்கு பிறகு, பா.ஜ., மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. பா.ஜ., 250 தொகுதிகளுக்கு குறைவாகவே வெற்றி பெறும். ஹரியானா, டில்லி, பஞ்சாப், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக தொகுதிகளில் பா.ஜ., தோல்வி அடையும். இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
4 விஷயங்கள்: 'பகீர்' கிளப்பிய கெஜ்ரிவால்
இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டளிக்குமாறு, உத்தரபிரதேச மக்களை கேட்டு கொள்கிறேன். நான்கு விஷயங்களைப் பற்றி பேச விரும்புகிறேன். அடுத்த ஆண்டு, பிரதமர் மோடிக்கு 75 வயதாகிறது. அடுத்த பிரதமர் அமித்ஷா என்று அவர் முடிவு செய்துள்ளார். அமித்ஷாவுக்கு தடையாக இருக்கக்கூடிய அனைத்து பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப் பட்டுள்ளனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 3 மாதங்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.,வினர் மாற்ற போகிறார்கள். ஜூன் 4ம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
மவுனம் ஏன்?
மணிப்பூரில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். பிரஜ்வல் ரேவண்ணா ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் பிரதமர் மோடி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு சேகரித்தார்.
டில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திய போது, ஸ்வாதி மாலிவால் போலீசாரால் தாக்கப்பட்டார். அப்போது பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார். ஆம் ஆத்மி கட்சி எங்கள் குடும்பம். ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடக்கவில்லை. ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.