அதானியிடம் எவ்வளவு வாங்குனீங்க? ராகுலை கேட்கிறார் பிரதமர் மோடி
அதானியிடம் எவ்வளவு வாங்குனீங்க? ராகுலை கேட்கிறார் பிரதமர் மோடி
ADDED : மே 09, 2024 12:54 AM
புதுடில்லி, ''கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதானி - அம்பானி என அறைகூவல் விடுத்து வந்த ராகுல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர்கள் பற்றி பேச மறுப்பது ஏன்?'' என, பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் தெலுங்கானாவின் கரிம் நகர் மாவட்டத்தில், நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஐந்து ஆண்டுகளுக்கு ரபேல் என்ற முழக்கத்தை, காங்கிரசின் இளவரசரான ராகுல் எழுப்பி வந்தார். இந்த முழக்கம் எடுபடவில்லை என தெரிந்ததும், ஐந்து தொழிலதிபர்கள் என, அவர் முழக்கமிட்டு வந்தார். தொடர்ந்து, அதானி - அம்பானி என, மெல்ல மெல்ல அவர் அறைகூவல் விடுத்து வந்தார்.
ஆனால், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, அதானி - அம்பானி என உச்சரிப்பதையே ராகுல் நிறுத்தி விட்டார். அதானி - அம்பானி ஆகியோரை விமர்சிக்காமல் இருப்பதற்கு, அவர்களிடம் இருந்து ராகுல் எவ்வளவு பணம் பெற்றார்? இவர்களுக்குள் ஏதாவது ஒப்பந்தம் உள்ளதா? அதெப்படி, அதானி - அம்பானியை விமர்சிப்பதை ஒரே இரவில் ராகுல் நிறுத்தினார்?
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, அதானி - அம்பானி குறித்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ராகுல் பேசிய வீடியோக்களை, தேதி வாரியாக சமூக வலைதளத்தில் காங்., வெளியிட்டுள்ளது.