வறட்சி நிவாரண செலவு எவ்வளவு? ஜி.டி.தேவகவுடா கேள்வி!
வறட்சி நிவாரண செலவு எவ்வளவு? ஜி.டி.தேவகவுடா கேள்வி!
ADDED : ஏப் 29, 2024 06:49 AM

பெங்களூரு: ''கேட்ட அளவில் வறட்சி நிவாரணம் வழங்கவில்லை என, குற்றம் சாட்டும் காங்கிரஸ் தலைவர்கள், வறட்சி நிவாரண பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்தனர்,'' என ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜி.டி.தேவகவுடா கேள்வி எழுப்பினர்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவது உறுதி. இந்த விரக்தி யால் மத்திய அரசை எதிர்த்து, அக்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். மாநிலத்தின் புத்திசாலி வாக்காளர்கள், இதை பொருட்படுத்த மாட்டார்கள்.
பெருமளவு பணம்
கேட்ட அளவில் வறட்சி நிவாரணம் வழங்கவில்லை என, குற்றம் சாட்டும் காங்கிரஸ் தலைவர்கள், வறட்சி நிவாரண பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்தனர். இம்முறை லோக்சபா தேர்தலில் பெருமளவில் பணம் செலவிட்டுள்ளனர். தன் அனைத்து விதமான செல்வாக்கையும், காங்., பயன்படுத்தியது. ஆனால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகள் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்.
நமது வரி, நமது உரிமை என்பது, கூட்டமைப்பு நடைமுறைக்கு எதிரானது. வெள்ளப்பெருக்கில் வீடுகளை இழந்தோருக்கு, மாநில அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுத்தது இல்லையா? மாநிலத்தில் எந்த மாவட்டத்திலும், வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. வாக்குறுதி திட்டங்களுக்கு மட்டும், பணத்தை செலவிடுகின்றனர்.
தேர்தல் நேரத்தில் பெண்களின் கணக்கில், பணம் செலுத்தி உள்ளனர். மத்திய அரசுடன் மோதுவது, மாநில நலனுக்கு நல்லது அல்ல. மத்திய அரசை எதிர்த்து காலி சொம்பை பிடித்து, போராட்டம் நடத்துவது சரியல்ல.
ஒருங்கிணைப்பு குழு
இரண்டாம் கட்டத்தில், 14 லோக்சபா தொகுதிகளுக்கு மே 7ல் தேர்தல் நடக்கிறது. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது தொடர்பாக, ஏப்ரல் 30ல் காலை 10:00 மணிக்கு, ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடக்கிறது. அன்று மதியம் 12:00 மணிக்கு 14 லோக்சபா தொகுதிகளின் பொறுப்பாளர்கள், மாவட்ட, தாலுகா தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்பர்.
கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மாநில பா.ஜ., தலைவர் உட்பட பலரும் எங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அதேபோன்று நாங்களும், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தோம். தேர்தல் என்றால் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் சகஜம்.
இவ்வாறு அவர் கூறினார்.

