மயில் கறி சமைப்பது எப்படி? 'வீடியோ' வெளியிட்டவர் கைது
மயில் கறி சமைப்பது எப்படி? 'வீடியோ' வெளியிட்டவர் கைது
ADDED : ஆக 13, 2024 01:08 AM

ஹைதராபாத், சமூக ஊடகத்தில் அதிக பார்வையாளர்களை பெறும் ஆசையில், 'மயில் கறி செய்வது எப்படி?' என சமையல், 'வீடியோ' வெளியிட்ட யுடியூபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
யுடியூப் சமூக ஊடகத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை பெறும் வீடியோக்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதால், பரபரப்புக்காக வீடியோ போடும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், தெலுங்கானாவை சேர்ந்த யுடியூபர் ஒருவர் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார். ெதலுங்கானாவின் ராஜன்னா சிர்சிலா மாவட்டம், தங்கல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோடம் பிரனய் குமார்.
உணவு தொடர்பான யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், மயில் கறி சமைப்பது எப்படி என, விபரமாக செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், மயில் கறி சமைத்து, ருசித்து சாப்பிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார் தங்கல்லப்பள்ளி கிராமத்துக்கு வந்து பிரனய் குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது வீட்டுக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், அங்கு சமைத்து வைக்கப்பட்டு இருந்த மயில் கறி மற்றும் பிரனய் குமாரின் ரத்த மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
அது, அசைவ உணவு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மயில் கறி தான் என்பது உறுதி செய்யப்பட்டால், பிரனய் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நம் தேசிய பறவையான மயில், பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வேட்டையாடுவது, உண்பது வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் குற்றமாக கருதப்படுகிறது.

