கவர்னருக்கு எப்படி கடிதம் எழுதலாம்? கெஜ்ரிவாலுக்கு சிறை நிர்வாகம் கிடுக்கி
கவர்னருக்கு எப்படி கடிதம் எழுதலாம்? கெஜ்ரிவாலுக்கு சிறை நிர்வாகம் கிடுக்கி
ADDED : ஆக 13, 2024 02:13 AM
புதுடில்லி, 'டில்லி துணைநிலை கவர்னருக்கு கடிதம் எழுதுவது, சிறை விதிகளை மீறும் செயலாகும். இது தொடர்ந்தால், நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, திஹார் சிறை நிர்வாகம் எச்சரித்துள்ளது.
முன் அனுமதி
மதுபான ஊழல் தொடர்பான வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுதந்திர தினத்தன்று, தனக்குப் பதிலாக அமைச்சர் ஆதிஷி தேசியக் கொடியை ஏற்றுவார் என, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதுபோன்ற கடிதம் எதுவும் வரவில்லை என, துணைநிலை கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திஹார் சிறை நிர்வாகம் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
சிறை விதிகளின்படி, முன் அனுமதி பெற்றுள்ள தனிப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே கடிதம் எழுத முடியும். ஆனால், விதிகளை மீறி, துணைநிலை கவர்னருக்கு கடந்த 6ம் தேதி கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளவை, சிறை விதிகளுக்கு அப்பாற்பட்டவை. அதனால், அது அனுப்பப்படாமல் கோப்பில் வைக்கப்பட்டுள்ளது.
சலுகை ரத்து
ஆனால், துணைநிலை கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது உங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை மீறிய செயலாகும். இதன்பின், சிறை விதிகளை மீறினால், கடிதம் அனுப்புவதற்கான சலுகை ரத்து உள்ளிட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.