சாலையில் பெரும் பள்ளம்: அரசு பேருந்து சிக்கி விபத்து
சாலையில் பெரும் பள்ளம்: அரசு பேருந்து சிக்கி விபத்து
ADDED : ஜூன் 27, 2024 01:49 AM

மெஹ்ராலி,:தெற்கு டில்லி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியதால், நேற்று சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அரசு பேருந்து, காஷ்மீர் கேட்டில் இருந்து லடோ சராய் நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. மெஹ்ராலியில் சாலையின் நடுவே திடீர் பள்ளம் உருவாகி, அதில் பேருந்து சிக்கிக் கொண்டது.
இதனால் கான்பூரில் இருந்து மெஹ்ராலி செல்லும் மார்க்கத்தில் பிற வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது. பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் பூபேந்தர் குமார் கூறும்போது, “மெட்ரோ ஸ்டேஷனில் பயணியரை இறக்கிவிட்டு நகரத் தொடங்கியபோது, பயங்கர சத்தத்துடன் சாலைப் பள்ளத்துக்குள் பேருந்து சிக்கிக் கொண்டது. சம்பவம் நடந்தபோது காலை 7:00 மணி என்பதால், குறைந்த அளவிலே பயணியர் இருந்தனர்,” என்றார்.
வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுப்பணித்துறையின் கோரிக்கையை ஏற்று, கடய்பூர் காவல் நிலையத்திலிருந்து எம்.ஜி., சாலையை நோக்கி மண்டி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்துக் காவல்துறை தடை விதித்துள்ளது. அந்த வழித்தடத்தில் இலகுரக மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
மண்டி கிராமம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், மண்டி சாலையில் இருந்து பந்த் சாலை மற்றும் சாண்ட் ஷ்ர் நாக்பால் மார்க் வழியாக எம்.ஜி., சாலை மற்றும் தெற்கு டில்லியை அடைய திருப்பி விடப்படுகின்றன.