ADDED : செப் 10, 2024 07:00 AM

தார்வாட்: 'ஹூப்பள்ளி - புனே இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்படும்' என, மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
விநாயகர் பண்டிகையை கொண்டாடும் ஹூப்பள்ளி - தார்வாட் மக்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி. பெங்களூரிலிருந்து ஹூப்பள்ளிக்கு ஏற்கனவே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
ஹூப்பள்ளி - புனே இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க வேண்டும். இவ்விரு வழித்தடங்கள் இணைப்பால், இப்பகுதி வர்த்தகம், தொழிற்பேட்டை முன்னேற்றம் பெறும் என, ஜூலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
எனது கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், 'ஹூப்பள்ளி - புனே இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் துவக்கப்படும்' என்று கூறியுள்ளார். ரயில் அட்டவணை, விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.