ADDED : ஜூன் 12, 2024 11:03 PM

கோலார் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் பூதி கோட்டையும் ஒன்று. இது தங்கவயலில் இருந்து 27 கி.மீ., தூரத்திலும், பங்கார்பேட்டையில் இருந்து 11.8 கி.மீ., தொலைவிலும் உள்ளது. இப்பகுதி வரலாற்று சிறப்புக்குரிய இடமாக கருதப்படுகிறது.
மைசூரின் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி பிறந்த இடமாகும்.இங்கு ஹைதர் அலி பூதிக் கோட்டையின் குகைக்குள் பிறந்ததாக, அதற்கான கல்வெட்டு ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் வைத்துள்ளனர்.
ஹைதர் அலி, மைசூரை ஆட்சி செய்த கிருஷ்ண ராஜ உடையார் படையில் சிப்பாயாக இருந்து, தளபதியாக உயர்ந்தவர். பின்னர் மைசூரின் முதல்வராக மாறியவர்.
இவர், கோலார் மாவட்டம் பூதி கோட்டையில் 1720ல் பிறந்தாலும், பெங்களூரு கிராமமான தேவனஹள்ளி ஓவல் கோட்டைக்குகுடிபெயர்ந்தவர். ஆங்கிலேயர்களின்கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போரிட்டார். போருக்கு தேவையான பல ஆயுதங்களை அவர்களிடம் இருந்தே பறிமுதல் செய்தார்.
பூதிக்கோட்டையில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இருக்கும் தேவனஹள்ளி ஓவன் கோட்டையில் அவர் தங்கியிருந்த போது தான், அவரது மகன் திப்பு சுல்தான் பிறந்தார். ஹைதர் அலி 1782 டிசம்பர் 7ல் ஆந்திர மாநிலம், சித்துாரில் காலமானார்.
ஆனால் அவரது இறுதி சடங்குகள் கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கபட்டினாவில் தான் நிறைவேற்றப்பட்டது. இவை,பூதி கோட்டையில் ஹைதர் அலி வரலாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கோட்டையின் உச்சியில் 2,000 ஆண்டுகள் பழமையான பெருமாள் சுவாமிகோவில் உள்ளது. வைணவர்கள் இங்கு நாராயணனை வழிபட்டு வந்தனர்.
இங்கு ஹிந்து -- முஸ்லிம் மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். வழிபாடுகளிலும் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த கோட்டையின் உச்சியில் இருந்து பார்த்தால் அதன் அழகிய சுற்றுப் புறங்கள் கண்கொள்ளா காட்சியாகும். இங்கு தடுப்பணை உள்ளது. ஆண்டு முழுதும்தண்ணீர் நிரம்பியிருக்கும். இது இப்பகுதியினருக்கு வர பிரசாதமாக அமைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் இப்பகுதியின் பாதுகாப்புக்கு தங்கவயல் போலீஸ் மாவட்டத்தின் சார்பில், பூதி கோட்டை போலீஸ் நிலையம்அமைத்தனர்.
- நமது நிருபர் -