ADDED : ஏப் 14, 2024 07:01 AM

சிக்கபல்லாப்பூர்: ''ஒக்கலிகர் ஆதரவு எனக்கும் உள்ளது,'' என, சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் ரக் ஷா ராமையா, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் ரக் ஷா ராமையா பேட்டி:
ஐந்து வாக்குறுதிகளை கொடுத்ததால் மட்டும், சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. பா.ஜ., தவறான ஆட்சியால், மக்கள் வெறுப்படைந்தனர். மாற்றத்தை விரும்பி, காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடும், பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்கள், பிரதமர் மோடியின் முகத்திற்காக ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கின்றனர்.
அப்படி என்றால் எம்.பி.,யாக இருந்து, அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று தான் அர்த்தம். வேலை செய்தவர்கள் எதற்காக, பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்த வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் பாதுகாப்பு இருக்காது என்று, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.
அருணாசல பிரதேசத்தில் சீனா ஊடுருவி வருகிறது. இதுபற்றி பா.ஜ., தலைவர்கள் பேசாதது ஏன்? அரசியல் அமைப்பை மாற்ற மாட்டோம் என்று, பிரதமர் மோடி கூறி உள்ளார். அவர் மாற்ற நினைத்தாலும், நாங்கள் விட மாட்டோம்.
சிக்கபல்லாப்பூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகர் பற்றி, நான் பேச மாட்டேன். அமைச்சராக இருந்தபோது, என்ன செய்தார் என்று, பா.ஜ.,வினரே கூறுகின்றனர். எலஹங்காவில் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
எங்கள் கட்சியின் முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லிக்கு, வயதாகிவிட்டது. வெயிலில் அவரால் பிரசாரம் செய்ய முடியாது. ஆனாலும் வரும் 16, 17, 18ம் தேதிகளில், மாலை நேரத்தில் என்னை ஆதரித்து பிரசாரம் செய்வார்.
நான் எம்.பி., ஆனால் எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். ஹொஸ்கோட், நெலமங்களா வரை மெட்ரோ ரயில் சேவை, நீட்டிக்க முயற்சி செய்வேன். சுதாகரை ஒக்கலிகர் ஆதரிப்பர் என்று சொல்ல முடியாது. எனக்கும் ஒக்கலிகர்கள் ஆதரவு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரக் ஷா ராமையா, பலிஜா சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

