எனக்கும் அமைச்சர் பதவி மீது விருப்பம்: வினய் குல்கர்னி
எனக்கும் அமைச்சர் பதவி மீது விருப்பம்: வினய் குல்கர்னி
ADDED : ஜூன் 20, 2024 06:07 AM

பெலகாவி: ''எனக்கும் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. கர்நாடகாவின், வட மாவட்டங்களில் எனக்கு செல்வாக்கு உள்ளது,'' என தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாகேந்திரா ராஜினாமாவால், ஒரு அமைச்சர் இடம் காலியாக உள்ளது. அந்த பதவிக்கு நான் வேண்டுகோள் விடுக்கவில்லை. இது குறித்து, கட்சியில் ஆலோசிக்கவில்லை.
நான் மூத்த அரசியல்வாதி. 20 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக, ஒரு முறை அமைச்சராக, கட்சியின் செயல் தலைவராக பணியாற்றியுள்ளேன்.
எனக்கும் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அமைச்சரவையை விஸ்தரிக்கும் போது, என்னை பரிசீலிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகாவின், வட மாவட்டங்களில் எனக்கு செல்வாக்கு உள்ளது, அமைச்சர் பதவிக்காக மேலிடத்துக்கு நெருக்கடி தர வேண்டிய அவசியம் இல்லை.
நான் கேட்காமலேயே, கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கியது. என் திறன் அடிப்படையில், கட்சி பதவி வழங்கும்.
கடந்த பல ஆண்டுகளாக, பஞ்சமசாலி இட ஒதுக்கீட்டுக்காக பசவ ஜெய மிருதுஞ்செயா சுவாமி தலைமையில் போராட்டம் நடக்கிறது. பா.ஜ.,வினர் பொய்யான வாக்குறுதி அளித்து, சமுதாயத்தினரை திசை திருப்புகின்றனர். அனைத்து சமுதாயத்தினருக்கும், நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என, முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
நடிகர் தர்ஷன் மீது, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் தங்களின் கடமையை செய்துள்ளனர். யார் தவறு செய்தாலும் அது தவறுதான்.
தண்டனை கிடைக்க வேண்டும். பொதுவாகவே, அந்த நடிகர் முரட்டுத்தனம் கொண்டவர்.
ஆனால் எங்களுடன் இருந்த போது, அப்படி இருந்தது இல்லை.
ஊடகத்தினர் மூலம் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மொத்த மாநிலத்துக்கும் தெரிந்துள்ளது. யாருடைய நெருக்கடிக்கும் போலீசார் பணிய மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.