ரெட்டியால் எனக்கு பாதிப்பில்லை பல்லாரி காங்., வேட்பாளர் பேட்டி
ரெட்டியால் எனக்கு பாதிப்பில்லை பல்லாரி காங்., வேட்பாளர் பேட்டி
ADDED : மே 02, 2024 06:26 AM

பல்லாரி: “ஜனார்த்தன ரெட்டி பா.ஜ.,வில் இருப்பதால், எனது வெற்றிக்கு பாதிப்பு இல்லை,” என, பல்லாரி காங்கிரஸ் வேட்பாளர் துக்காராம் கூறினார்.
பல்லாரி காங்கிரஸ் வேட்பாளர் துக்காராம் அளித்த பேட்டி:
பல்லாரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சண்டூரில் இருந்து, நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளேன். இதனால் மக்களிடம் எனக்கு வரவேற்பு நன்றாக உள்ளது. பல்லாரியில் எனது மகள் சவுபர்ணிகாவுக்கு சீட் கேட்டது உண்மை தான். ஆனால் மேலிடம் எனக்கு வாய்ப்பு கொடுத்தது.
பல்லாரி காங்கிரசில் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். ஒன்றாக தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். அமைச்சர் சந்தோஷ் லாட் முன்பு, பல்லாரி பொறுப்பு அமைச்சராக இருந்தார். இங்கு ஏராளமான பணிகள் செய்துள்ளார். அவர் செய்த பணிகளே எனக்கு வெற்றி பெற்று தரும்.
பல்லாரியில் இருந்து சோனியா வெற்றி பெற்ற பின்னர், தொகுதி வளர்ச்சிக்காக 3,300 கோடி ரூபாய் கொடுத்தார். அதில் 2,500 கோடி ரூபாயில் பல்லாரியில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டது. மீதம் 800 கோடி ரூபாயில் சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
ஜனார்த்தன ரெட்டி, பா.ஜ.,வில் மீண்டும் இணைந்திருப்பதால், எனது வெற்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இங்கு அவர் ராஜ்யம் செய்தபோதே, சண்டூரில் வெற்றி பெற்று இருக்கிறேன். யாரை வெற்றி பெற வைப்பது என்று முடிவு எடுப்பது மக்கள்.
பல்லாரியில் சுரங்க தொழில் இருந்தாலும், வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. இளைஞர்கள் திறனை மேம்படுத்த வேண்டும். இங்கு பல பணிகள் நிலுவையில் உள்ளது. நான் எம்.பி., ஆனால் பணிகளை விரைந்து முடிப்பேன். பல்லாரி நகருக்கு துங்கபத்ரா ஆற்றில் இருந்து, தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

