ADDED : மே 22, 2024 10:52 PM
புதுடில்லி,:“நான் மனிதப் பிறவி அல்ல; என்னை இந்த உலகிற்கு அனுப்பியதே பரமாத்மாதான்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது புது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. ஐந்து கட்டங்கள் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ஆறாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாளும், ஏழாம் கட்ட தேர்தல் வரும் 1லும் நடக்க இருக்கிறது.
இதையொட்டி, தேர்தல் நடக்கவுள்ள இடங்களில். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, தனியார் டி.வி.,க்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது, 'நீங்கள் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றுகிறீர்கள். உங்கள் ஆற்றலுக்கு என்ன காரணம்?' என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியதாவது:
என் தாய் உயிருடன் இருக்கும் வரை தாய் வாயிலாகத்தான் தான் இந்த உலகுக்கு நான் வந்தேன் என நினைத்திருந்தேன்.
ஆனால், அவர் மரணத்துக்குப் பின் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். சிந்தனை வாயிலாக கிடைக்கும் எண்ணங்களை முழுமையாக நம்புகிறேன்; அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன்.
மற்றவர்கள் இதை விமர்சிக்கலாம்; அதற்கு எதிராக சொல்லலாம். அதைப் பற்றி கவலைப்படவில்லை. அதேநேரம், என்னுடைய எண்ணங்களை முழுமையாக நம்புகிறேன்.
நான் 'பயோலாஜி'க்கலாக பிறக்கவில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மா தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், ஓடிசாவின் புரி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் சாம்பித் பித்ரா, 'புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர்' என கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு வலுத்தது.
அதையடுத்து, 'பிரதமர் மோடி புரி ஜெகந்நாதரின் பக்தர் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டேன்' என, விளக்கமளித்தார்.
இந்நிலையில், 'நான் மனிதப் பிறவி அல்ல' என மோடி பேசியுள்ளது அரசியல் அரங்கில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

