‘என்னை கொல்லலாம்; கைது செய்யலாம் எந்த விளைவையும் எதிர்கொள்ள தயார்’
‘என்னை கொல்லலாம்; கைது செய்யலாம் எந்த விளைவையும் எதிர்கொள்ள தயார்’
ADDED : ஆக 05, 2026 09:51 PM

புதுடில்லி: “வங்கதேசம் திரும்ப முடிவு செய்துள்ள என்னை அங்குள்ளவர்கள் கொல்லலாம் அல்லது கைது செய்யலாம். எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்,’‘ என, அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஆட்சியில் இருந்த அவாமி லீக் கட்சியை எதிர்த்து, 2024ல் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து, ஆக., 5ல் ரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறினார்.
அவர், நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே, வங்கதேசத்தில் அமைந்த இடைக்கால அரசு ஷேக் ஹசீனா உட்பட அவாமி லீக் கட்சி தலைவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகளை பதிவு செய்தது. அவருக்கு எதிராக போராட்டங்களின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அவரை நாடு கடத்துவது குறித்து வங்கதேச அரசு கோரிக்கையும் விடுத்துள்ளது. இந்நிலையில், டில்லியில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ஊடக நிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக தோன்றி ஷேக் ஹசீனா நேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2024ல், நாட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாலும், அந்நாட்டு மக்களுடன் நான் இணைந்துள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக பயம் காரணாக வங்கதேசம் திணறி வருகிறது. என் நாட்டு மக்கள் துன்பப்படும் போது, என்னால் விலகி இருக்க முடியாது.
எனக்கு என்ன விதி காத்திருந்தாலும், நான் என் மக்களிடம் திரும்புவேன். அந்நாட்டு அரசு என்னை கொல்லலாம்; கைது செய்து சிறையில் அடைக்கலாம். எந்த விளைவுகள் நேர்ந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
வங்கதேச மக்களுடன் துணைநிற்க வேண்டும் என்பதே, நான் நாடு திரும்புவதற்கு காரணம். அவர்கள் வாழ்க்கை மேம்படுவதை உயர்த்துவதே என் நோக்கம். இந்தாண்டு டிசம்பரில் வங்கதேசம் செல்வேன். என் கட்சி மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இந்தியாவில் எனக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நாட்டு அரசு என்னை மரியாதையுடன் நடத்தியது.
இவ்வாறு அவர் பேசினார்.
