தர்ஷனுக்கு நான் உத்தரவிட முடியாது: சுமலதா விளக்கம்
தர்ஷனுக்கு நான் உத்தரவிட முடியாது: சுமலதா விளக்கம்
ADDED : ஏப் 20, 2024 04:50 AM

உடுப்பி, : ''யாருக்கு பிரசாரம் செய்ய வேண்டும்,'' என்று, நடிகர் தர்ஷனுக்கு உத்தரவிட முடியாது என்று, எம்.பி., சுமலதா கூறி உள்ளார்.
கன்னட நடிகர் தர்ஷன். மாண்டியா எம்.பி., சுமலதாவின் குடும்ப நண்பர். தர்ஷனை தனது இரண்டாவது மகன் என்று, சுமலதா கூறி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுமலதா பா.ஜ.,வில் இணைந்தார்.
இந்நிலையில், மாண்டியா காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமணே கவுடாவை ஆதரித்து, நேற்று முன்தினம் தர்ஷன் பிரசாரம் செய்தார். இதனால் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடுப்பியில் நேற்று சுமலதா அளித்த பேட்டி:
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தர்ஷனை, சுமலதா தான் அனுப்பினார் என எழுந்துள்ள யூகங்களுக்கு, என்னால் பதில் சொல்ல முடியாது. நான் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், தர்ஷன் எனக்கு பிரசாரம் செய்து இருப்பார். நாங்கள் இருவரும் அரசியல்ரீதியாக, எதுவும் விவாதிப்பது இல்லை. யாருக்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்று, அவருக்கு நான் உத்தரவிட முடியாது.
கடந்த சட்டசபை தேர்தலில், மாண்டியா மத்துாரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., உதய் கவுடா, ஸ்ரீரங்கபட்டணாவில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் சச்சிதானந்தா; மேலுகோட்டேயில் சுயேச்சையாக போட்டியிட்ட, தர்ஷன் புட்டண்ணய்யாவுக்கு ஆதரவாக தர்ஷன் பிரசாரம் செய்தார்.
'கட்சி முக்கியம் இல்லை. தனி நபர் தான் முக்கியம்' என்று அவர் கூறுகிறார். எனது சொந்த விருப்பத்தில் பா.ஜ.,வில் இணைந்து உள்ளேன். பா.ஜ.,வை தவிர, வேறு கட்சியை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. கட்சி மேலிடம் கூறினால், மாண்டியாவில் குமாரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

