நான் எந்த கட்சியிலும் இல்லை யோகேஸ்வர் மகள் விளக்கம்
நான் எந்த கட்சியிலும் இல்லை யோகேஸ்வர் மகள் விளக்கம்
ADDED : ஏப் 04, 2024 10:54 PM

ராம்நகர், - ''நான் எந்த கட்சியிலும் இல்லை,'' என்று, பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் மகள் நிஷா விளக்கம் அளித்து உள்ளார்.
ராம்நகர், சென்னப்பட்டணாவைச் சேர்ந்தவர் யோகேஸ்வர். பா.ஜ., - எம்.எல்.சி., இவரது மகள் நிஷா. தந்தைக்கு ஆதரவாக தேர்தல்களில் பிரசாரம் செய்தார். இந்நிலையில் காங்கிரசில் இணைய ஆர்வம் காட்டிய நிஷா, துணை முதல்வர் சிவகுமார், எம்.பி., சுரேஷை சந்தித்து பேசினார். காங்கிரசில் இணைவதற்கு எனது குடும்பத்தில் எதிர்ப்பு இல்லை என்றும் கூறினார்.
ஆனால், நிஷாவை கட்சியில் சேர்க்க, துணை முதல்வர் சிவகுமார் தயக்கம் காட்டுகிறார். தந்தை, மகளை அரசியலுக்காக பிரித்தது போல் ஆகிவிடும் என்று கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷா ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், ''காங்கிரசில் இணைய முயற்சி செய்தேன். நான் எங்கும் சென்றாலும், காங்கிரசில் இணைந்து விட்டீர்களா என்று கேட்கின்றனர். இப்போது நான் எந்த கட்சியிலும் இல்லை. மக்களுடன் இருக்கிறேன். வரும் நாட்களில் நல்ல முடிவு எடுப்பேன்,'' என்று கூறி உள்ளார்.

