முனிரத்னாவை வளர்த்து விட்டேன் மார் தட்டும் காங்., - எம்.பி., சுரேஷ்
முனிரத்னாவை வளர்த்து விட்டேன் மார் தட்டும் காங்., - எம்.பி., சுரேஷ்
ADDED : மார் 25, 2024 06:26 AM

பெங்களூரு: ''பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவை அரசியல்ரீதியாக வளர்த்து விட்டேன்,'' என்று, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் மார்தட்டி உள்ளார்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா. இவர் முன்பு காங்கிரசில் இருந்தார். கடந்த 2019ல் பதவியை ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ.,க்களில் முனிரத்னாவும் ஒருவர். காங்கிரசில் இருக்கும் போது துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
இப்போது சிவகுமார், சுரேஷுக்கு எதிராக பேசி வருகிறார். லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரலில் போட்டியிடும் சுரேஷை தோற்கடிப்போம் என்று முனிரத்னா சூளுரைத்து உள்ளார்.
பொய்யில் வல்லவர்
பெங்களூரில் எம்.பி., சுரேஷ் நேற்று அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் குமாரசாமி பொய் பேசுவதில் வல்லவர். பொய் பேசுவது மட்டுமே அவரது வேலை. அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவரை பற்றி அதிகம் பேச மாட்டேன். விரைவில் குணம் அடைந்து அரசியல் களத்திற்கு வர, கடவுளை வேண்டி கொள்கிறேன்.
பெங்களூரு ரூரல் மக்கள் என்னுடன் இருக்கும் போது, எதற்காக எதிரணியை பார்த்து நான் பயப்பட வேண்டும். ராம்நகர் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன், ஒவ்வொரு ஆண்டும் தொகுதி மக்களுக்கு, பண்டிகை காலங்களில் பரிசு பொருட்கள் கொடுக்கிறார்.
பங்களிப்பு
ரம்ஜானை ஒட்டி குக்கர்கள் வாங்கி வைத்து இருந்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், குக்கர்களை வினியோகிக்காமல் வைத்து உள்ளார். ஆனால் குக்கர் கொடுத்து ஓட்டுகளை பெற முயற்சி செய்வதாக, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களால், பொருளாதார முன்னேற்றம் அடைய போகிறது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ,, முனிரத்னா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, அவரது தொகுதி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
அரசியல்ரீதியாகவும் அவரை வளர்த்து விட்டேன். இன்று எங்களுக்கு எதிராகவே பேசுகிறார். அவருக்கும் நல்லது நடக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

