ஹைதராபாத் வரேன்; முடிஞ்சா தடுக்கலாம் அசாதுதீன் ஓவைசிக்கு நவ்நீத் ராணா சவால்
ஹைதராபாத் வரேன்; முடிஞ்சா தடுக்கலாம் அசாதுதீன் ஓவைசிக்கு நவ்நீத் ராணா சவால்
ADDED : மே 12, 2024 12:54 AM

புதுடில்லி, ''நான் ஹைதராபாதுக்கு வருகிறேன்; முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்,'' என, அசாதுதீன் ஓவைசிக்கு, பா.ஜ., வேட்பாளர் நவ்நீத் ராணா சவால் விடுத்துள்ளார்.
தமிழில், அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நவ்நீத் ராணா, 38.
இவர், 2019- லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர், தெலுங்கானாவின் ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் மாதவி லதாவை ஆதரித்து சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அத்தொகுதியில் போட்டியிடும் சிட்டிங் எம்.பி.,யும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசியை கடுமையாக தாக்கிப் பேசினார்.
பிரசாரத்தில் நவ்நீத் ராணா கூறுகையில், 'எங்களுக்கு வெறும் 15 வினாடிகள் போதும். போலீசாரை 15 வினாடிகளுக்கு அகற்றி வைத்தால், இருக்கும் இடம் தெரியாமல் உங்களை அழித்து விடுவோம்' என்றார்.
இவர், அசாதுதீன் ஓவைசி மற்றும் அவரது சகோதரரை குறிவைத்து பேசியதாகக் கூறப்படுகிறது. நவ்நீத் ராணாவின் இந்தப் பேச்சு, பிரசார களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த அசாதுதீன் ஓவைசி, ''என் சகோதரர் பீரங்கி போன்றவர். தற்போது எங்கள் கட்டுப்பாட்டில் அமைதியாக இருக்கிறார்,'' என்றார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நவ்நீத் ராணா நேற்று கூறியதாவது:
அசாதுதீன் ஓவைசி தன் சகோதரரை பீரங்கி என அழைத்துள்ளார். இது போன்ற பீரங்கிகளை நாங்கள் வீட்டிற்கு வெளியே அலங்காரத்திற்காக வைத்துள்ளோம்.
ராமர் பக்தர்களும், மோடியின் சிங்கங்களும் தற்போது இந்தியா முழுதும் ஒவ்வொரு தெருவிலும் சுற்றி வருகின்றனர். நான், ஹைதராபாத் வருகிறேன். யார் என்னை தடுக்கின்றனர் என்பதை பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், 'காங்கிரசுக்கு ஓட்டளித்தால் பாகிஸ்தானுக்கு ஓட்டளிப்பதற்கு சமம்' என, நவ்நீத் ராணா தெரிவித்தார். இது குறித்து அவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.