பிரசாரத்துக்கு செல்வேன்! குழப்புகிறார் நடிகர் சுதீப்
பிரசாரத்துக்கு செல்வேன்! குழப்புகிறார் நடிகர் சுதீப்
ADDED : மார் 23, 2024 11:11 PM

பெங்களூரு: ''லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்தால், நிச்சயம் செல்வேன்,'' என, நடிகர் சுதீப் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் வருவதால், நடிகர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்த, வேட்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சுதீப், தர்ஷன், யஷ் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களின் உதவியை நாடுவது கட்சிகளின் வழக்கம்.
கடந்த லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுமலதா போட்டியிட்டார். இவருக்கு பக்கபலமாக திரையுலகினர் நின்றனர். குறிப்பாக தர்ஷன், யஷ் ஆகிய இருவரும் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்து பிரசாரம் செய்தனர். இது சுமலதாவின் வெற்றிக்கு காரணமானது.
இம்முறை மாண்டியாவை கூட்டணிக் கட்சியான ம.ஜ.த.,வுக்கு, பா.ஜ., விட்டுக் கொடுத்துள்ளது. எனவே சுமலதா போட்டியிடுவது சந்தேகம். ஒருவேளை சுயேச்சையாக போட்டியிட்டாலும், ஆச்சர்யப்பட முடியாது.
நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, ஷிவமொகா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியதால், அவருக்கு ஆதரவாக சிவராஜ்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யமாட்டேன் என, நடிகர் யஷ் ஏற்கனவே கூறிவிட்டார்.
கடந்த தேர்தலில் நடிகர் சுதீப், பா.ஜ.,வுக்கு ஆதரவாக சில தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இம்முறையும் அவர் பிரசாரம் செய்யக்கூடும். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தற்போதைக்கு யாரும் என்னை பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. நான் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பு பாக்கியுள்ளது. அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. படப்பிடிப்பு முடிந்த பின், தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்தால் நிச்சயம் செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எந்த கட்சிக்கு ஆதரவாக என்பதை நடிகர் சுதீப் அறிவிக்காததால், அவரது ரசிகர்களும் வாக்காளர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

