ஹிந்து - முஸ்லிம் என ஒருபோதும் அரசியல் செய்ய மாட்டேன்: மோடி
ஹிந்து - முஸ்லிம் என ஒருபோதும் அரசியல் செய்ய மாட்டேன்: மோடி
ADDED : மே 16, 2024 12:26 AM
புதுடில்லி: 'ஹிந்து - முஸ்லிம் என ஒருபோதும் அரசியல் செய்ய மாட்டேன்; அவ்வாறு செய்தால் பொது வாழ்க்கைக்கே நான் தகுதியற்றவன் ஆகிவிடுவேன்' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிரதமர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
அதிக குழந்தைகள் பெற்றவர்களை பற்றி நான் பேசும்போது, நான் முஸ்லிம்களை குறிப்பிடுகிறேன் என நினைத்துக் கொள்வது ஏன்? இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
ஏழைக் குடும்பங்களின் நிலை இதுதான். எங்கு வறுமை இருக்கிறதோ, அங்கு நிறைய குழந்தைகள் உள்ளனர். ஹிந்து குடும்பத்திலும் இதுபோன்ற பிரச்னை உள்ளது.
அவர்களால், குழந்தைகளுக்கு சரியான கல்வியை கொடுக்க முடியவில்லை. நான் ஹிந்துக்கள் என்றோ, முஸ்லிம்கள் என்றோ பெயர் சொல்லவில்லை.
உங்களால் எத்தனை குழந்தைகளை வளர்க்க முடியுமோ அத்தனை குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
உங்கள் குழந்தைகளை அரசு கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்காதீர்கள். நான் சிறு வயதில் முஸ்லிம் குடும்பத்தினர் மத்தியில் வாழ்ந்தேன். எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். 2002க்கு பின் என் பெயரை கெடுக்க முயற்சி நடந்தது.
என் வீட்டருகே முஸ்லிம் குடும்பத்தினர் இருந்தனர். ரம்ஜான் அன்று, வீட்டில் சமைக்க மாட்டோம். முஸ்லிம் வீடுகளில் இருந்துதான் எங்களுக்கு உணவு வரும்.
நான் ஓட்டு வங்கி அரசியலுக்காக பணியாற்ற மாட்டேன். ஏதாவது தவறு நடந்தால், அதனை தவறு என சொல்லிவிடுவேன். நான் என்றைக்கு ஹிந்து - முஸ்லிம் என அரசியல் செய்கிறோனோ அன்று பொதுவாழ்க்கைக்கு தகுதி அற்றவன் ஆகிவிடுவேன். ஹிந்து, முஸ்லிம் என அரசியல் செய்ய மாட்டேன். இதுதான் என் அரசியல் தீர்மானம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.