இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்! கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா அறிவிப்பு
இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்! கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா அறிவிப்பு
ADDED : செப் 14, 2024 11:29 PM

துமகூரு : ''இனிமேல் சட்டசபை உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். ஆனால், அரசியலில் இருப்பேன். தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா அறிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜண்ணா, 73, மாநில கூட்டுறவு துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் முதல் முறையாக, துமகூரு மாவட்டம், மதுகிரி தாலுகா, கேயாத்சந்திரா தாலுகா பஞ்சாயத்து உறுப்பினராக, 1976ல் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் வாயிலாக அரசியலில் காலடி எடுத்து வைத்த ராஜண்ணா, 1980 மற்றும் 1984ல் இரண்டு முறை துமகூரு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கட்சி வளர்ச்சிக்காக இவர் செய்த பணியை பாராட்டி, 1998ல் எம்.எல்.சி., பதவி வழங்கப்பட்டது. 2004ல் மதுகிரியில் போட்டியிட, காங்கிரஸ் வாய்ப்பு அளிக்கவில்லை.
இதனால், காங்கிரசில் இருந்து விலகி, ம.ஜ.த.,வில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். 2008 தேர்தலில் ம.ஜ.த.,வில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
இதையடுத்து 2013ல் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வானார். 2018ல் தோல்வி அடைந்தார். 2023ல் மீண்டும் வெற்றி பெற்று, கூட்டுறவு துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
கூட்டுறவு சங்கங்களில் இணைந்து பல்வேறு திட்டங்களை கொண்டு சென்றவர். இதனாலேயே அந்த துறை அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், துமகூரில் நேற்று அமைச்சர் ராஜண்ணா கூறியதாவது:
இனி சட்டசபை உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். ஆனால், அரசியலில் இருப்பேன். தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்.
தேவையானவர்களை வெற்றி பெற செய்வேன். தேவையற்றவர்களை தோல்வியடைய செய்வேன். மதுகிரி தொகுதியை, மாவட்ட தலைநகரமாக மாற்றுவதற்கு முயற்சிப்பேன்.
என் அதிகாரம் முடிவதற்குள் அந்த பணியை செய்து முடிப்பேன். தொடர்ந்து வளர்ச்சி பணிகளை செய்வேன். அடுத்த முறை கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.