அரசியலில் இருந்தே விலகுவேன்: லவ்லி லவ்லி திட்டவட்டம்
அரசியலில் இருந்தே விலகுவேன்: லவ்லி லவ்லி திட்டவட்டம்
ADDED : மே 09, 2024 02:28 AM

புதுடில்லி:“பா.ஜ.,வில் இருந்து விலகுவதற்குப் பதில் அரசியலில் இருந்தே விலகுவேன்,” என, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சமீபத்தில் சேர்ந்த அரவிந்த் சிங் லவ்லி கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி பா.ஜ.,வில் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பா.ஜ., தலைவர்கள் நேற்று மதிய உணவுடன் இணைந்த கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர். அரவிந்த் சிங் லல்வி, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின், அரவிந்த் சிங் லவ்லி, நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த முறை கோபத்தால் காங்கிரஸிலிருந்து விலகும் முடிவை எடுத்தேன். ஆனால், இப்போது மிகவும் யோசித்து முடிவு எடுத்துள்ளேன். இனி, பா.ஜ.,வில் மட்டுமே என் பணியை தொடருவேன். அப்படி விலகும் சூழல் ஏற்பட்டால் அரசியலில் இருந்தே விலகுவேன்.
எந்தக் கட்சியாக இருந்தாலும், ஒரு தொண்டரின் பங்கு மிக முக்கியமானது. அந்தப் பணியை மிகவும் நேர்த்தியாக செய்வேன்.
முன்பெல்லாம் யாராவது தேசபக்தியைப் பற்றி பேசினால், அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என மக்கள் நினைத்தனர். அதுவே இப்போது, தேசத்தின் மீது அன்பை வெளிப்படுத்துபவர் பா.ஜ.,வைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என கருதுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அரவிந்த் சிங் லவ்லி கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தார்.
இதற்கு முன், 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரசில் இருந்து விலகிய லவ்லி, பா.ஜ.,வில் சேர்ந்தார்.
ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே 2018ல் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார். அன்றிலிருந்து காங்கிரஸில் இருந்த லவ்லி, கடந்த வாரம் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார்.