ADDED : ஏப் 30, 2024 10:28 PM

பாகல்கோட்: ''லோக்சபா தேர்தலில் பாகல்கோட்டில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்,'' என, காங்கிரஸ் வேட்பாளர் சம்யுக்தா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பாகல்கோட் தொகுதியில், எனக்கு ஆதரவு பெருகி வருகிறது. தொகுதியில் உள்ள பெண்கள், என்னை தங்களின் சகோதரியாக பார்க்கின்றனர்.
தொகுதியில் நிலவும் பிரச்னை குறித்து, பார்லிமென்டில் குரல் கொடுப்பேன் என்று நம்புகின்றனர். இதனால் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
நான் எம்.பி., யானால், பாகல்கோட் - குடச்சி ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுப்பேன். கலசா - பண்டூரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, நேர்மையான முயற்சி எடுப்பேன். சிறப்பு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து, சிறப்பு மானியம் வாங்குவேன்.
பாகல்கோட் பா.ஜ., - எம்.பி., கட்டிகவுடர், அரசியலில் பரந்த அனுபவம் கொண்டவர். ஆனால் அவர் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவிலலை. மாநிலத்தில் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் பிரச்னையில் உள்ளனர். மத்திய அரசிடம் பேசி நிதி வாங்கித் தரவில்லை.
பாகல்கோட்டில் எனக்கு சீட் கொடுக்கப்பட்டதால், கட்சிக்குள் சில குழப்பம் ஏற்பட்டது. ஒருவருக்கு 'சீட்' கிடைத்தால், இன்னொருவருக்கு வருத்தம் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் எங்கள் அனைவருக்கும் கட்சி தான் முக்கியம். எனது வெற்றிக்காக அனைவரும் கைகோர்த்துள்ளனர்.
அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு, சிறுவயதில் இருந்தே அரசியல் மீது ஈர்ப்பு இருந்தது. மாநில அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களால் 98 சதவீதம் பேர், பயனடைந்து உள்ளனர். தேசிய அளவில் பல வாக்குறுதிகளை, கட்சி அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.