மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எதிர்த்து போராட இப்ராஹிம் அழைப்பு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எதிர்த்து போராட இப்ராஹிம் அழைப்பு
ADDED : மார் 28, 2024 10:40 PM

பெங்களூரு : “லோக்சபா தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து, 'இண்டியா' கூட்டணிக் கட்சியினர் வீதியில் இறங்கி போராட வேண்டும்,” என, ம.ஜ.த.,வில் இருந்து நீக்கப்பட்ட இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., இவை தான், பா.ஜ.,வின் பெரிய ஆயுதங்கள். உலகின் எந்த நாட்டிலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் உள்ளது. லோக்சபா தேர்தலில் அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதற்கு, 'இண்டியா' கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வீதியில் இறங்கி போராட வேண்டும்.
நல்லவர்கள்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, எளிதில் முடக்க முடியும். தேர்தல் பத்திர ஊழலுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலர், நேர்மையாக பேசி உள்ளனர். அந்த அமைப்பிலும் நல்லவர்கள் உள்ளனர். ம.ஜ.த., தனித்து போட்டியிட்டு இருந்தால், ஆறு இடங்களில் வெற்றி பெற்று இருக்கும்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, கட்சியை பாழாக்கிவிட்டனர். பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த.,வுக்கு மூன்று இடங்கள் தான் கிடைக்கும் என்று, நான் கணித்தது சரியாகிவிட்டது.
வெற்றி கடினம்
மாண்டியா, பெங்களூரு ரூரலில் ஒக்கலிகர்கள் கண்டிப்பாக, பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். குமாரசாமிக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு கடவுள் நல்ல ஆரோக்யம் தரட்டும். தேவகவுடாவை அவரது குடும்பத்தினர் படாய்படுத்துகின்றனர். வயதான காலத்தில் அவருக்கு நிம்மதி இல்லை. மாண்டியாவில் குமாரசாமி வெற்றி பெறுவது கடினம்.
தொகுதி பங்கீடு குறித்து, நீங்கள் கணித்தது சரியாக உள்ளது என்று, ம.ஜ.த.,வில் இருந்து சிலர் என்னிடம் மொபைல் போனில் பேசினர். அவர்கள் யார் என்று சொல்ல மாட்டேன். டாக்டர் மஞ்சுநாத்தை ம.ஜ.த., வேட்பாளராக நிறுத்தி இருக்கலாம். அவரை எதற்காக பா.ஜ.,விற்கு பிடித்துத் தள்ளினர் என தெரியவில்லை. அவரும் வெற்றி பெறுவது கடினம் தான்.
பா.ஜ., ஒரு மனித ராணுவம். ஜனநாயகத்தை காப்பாற்ற என்னால் முடிந்த முயற்சி செய்வேன். ம.ஜ.த.,வில் இருந்து வெளியே வந்த பின்னர், முதல்வர் சித்தராமையாவிடம் நான் பேசவில்லை. ம.ஜ.த., தலைவர் பதவியில் இருந்து, என்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லை.
இதனால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளேன். ஏப்ரல் 12 ம் தேதிக்கு பிறகு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

