'அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த தோல்வி' : மேற்கு வங்க அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
'அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த தோல்வி' : மேற்கு வங்க அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
ADDED : ஆக 16, 2024 11:45 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது.
இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இது குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
பெண் பயிற்சி டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, சமீபத்தில் ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையை நோக்கி பேரணி நடந்தது.
இதில் புகுந்த சமூக விரோதிகள், மருத்துவமனைக்குள் நுழைந்து அவசர சிகிச்சை பிரிவு, நர்சிங் மையம், மருந்து அறைகளை சேதப்படுத்தியதுடன், கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
காவல் துறையில் உளவுப் பிரிவு செயல்படுகிறது. மருத்துவமனையை நோக்கி பெரிய அளவில் பேரணி நடக்க உள்ளது என்ற தகவல், அந்தப் பிரிவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும்.
பேரணியில், 7,000 பேர் வரை பங்கேற்றுள்ளனர். ஆனால், இது குறித்த தகவல் உளவுப் பிரிவுக்கு தெரியாது என்பதை நம்ப முடியவில்லை.
இது அரசு இயந்திரத்தின் ஒட்டு மொத்த தோல்வி. இது போன்ற சம்பவங்கள், நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் நடந்ததாக தெரியவில்லை.
போலீசார் காயம்அடைந்து, அவர்களால் வன்முறை கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் - ஒழுங்கு தோல்வி அடைந்து விட்டதாக தானே அர்த்தம். பயிற்சி பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், சீரமைப்பு பணிகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. தற்போது சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதே நிலை தொடர்ந்தால், மருத்துவமனையை மூடவும், நோயாளிகளை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றவும் இந்த நீதிமன்றம் உத்தரவிட நேரிடும்.
தாக்கல்
சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையின் நிலைமை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் விவரிக்கும் தனித்தனி பிரமாணப் பத்திரங்களை, வரும் 21ம் தேதிக்குள் காவல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், மருத்துவமனையில் வன்முறை நிகழ்ந்ததற்கான காரணங்களையும் காவல் துறை சமர்ப்பிக்க வேண்டும்.
பெண் டாக்டர் கொலையில், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை, சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு, 21க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, மேற்கு வங்க அரசை கண்டித்து, எஸ்.யு.சி.ஐ.சி., எனப்படும் இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் கம்யூ., அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
பெண் பயிற்சி டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு, கோல்கட்டாவின் மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று பேரணி நடந்தது.
இதில், முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் நடந்த வன்முறைக்கு, பா.ஜ.,வும், கம்யூ., கட்சியினரும் தான் காரணம். குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கவே, அவர்கள் மருத்துவமனையை சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் உண்மை வெளிவர வேண்டும் என, நாங்கள் விரும்புகிறோம். மேற்கு வங்க போலீசார், 90 சதவீத விசாரணையை முடித்த நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. நாளைக்குள் இந்த விஷயத்தில் சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.