மதம் சார்ந்தவர்களே கோவிலை நிர்வகிக்க ஐகோர்ட் உத்தரவு
மதம் சார்ந்தவர்களே கோவிலை நிர்வகிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 01, 2024 12:31 AM

பிரயாக்ராஜ்: 'கோவில்கள் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு என்பது மதம் தொடர்பானவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு தொடர்பில்லாத வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது' என, வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கோவில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சை குறித்த வழக்குகளை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு:
உத்தர பிரதேசத்தில், குறிப்பாக மதுரா மாவட்டத்தில், கோவில் நிர்வாகம் தொடர்பாக, 197 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில், கோவில்களை நிர்வகிக்கும், 'ரிசீவர்' என்ற நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் பொறுப்பு அதிகாரியாக, வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த பதவியை கவுரமாகக் கருதும் அவர்கள், அந்த கோவில் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண விடாமல் தடுக்கின்றனர். இதனால், கோவில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சை நீடித்துக் கொண்டே இருக்கிறது. இது, பல கோவில்கள் தொடர்பான வழக்கில் நடந்து வருகிறது.
கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு, வேதம், சாஸ்திரம் அறிந்த, மதம் தொடர்பானவர்களிடமே இருக்க வேண்டும். அப்போதுதான், அந்த கோவில் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.
இந்த விஷயத்தில் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான வழக்குகளில் இந்த உத்தரவை செயல்படுத்துவதை, மாவட்ட நீதிபதி உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.