காவிரியில் அஸ்தி கரைக்க எதிர்ப்பு கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
காவிரியில் அஸ்தி கரைக்க எதிர்ப்பு கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ADDED : ஜூலை 31, 2024 04:22 AM
பெங்களூரு :   காவிரி ஆற்றில் அஸ்தி கரைப்பதற்கு தடை விதிக்க கோரி, வக்கீல் தாக்கல் செய்த மனு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு, உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக -- தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாகவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் காவிரி ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் இறந்தவர்களின், 'அஸ்தி' கரைக்கப்படுவதால், குடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் காவிரி ஆற்றில் அஸ்தி கரைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வக்கீல் சுபால் குமார் கவுசிக் உட்பட ஆறு பேர் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை தலைமை நீதிபதி அன்ஜாரியா நேற்று முன்தினம் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வக்கீல் சுபால் குமார் கவுசிக் வாதாடுகையில், 'காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள தனியார் நிலங்களில் உடல் தகனம் செய்யப்பட்டு வருகிறது. இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
'ஆனால், அஸ்தியை ஆற்றில் கரைப்பதில் கட்டுப்பாடுகள் இல்லை. அஸ்தி கரைக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகவும் இல்லை. இதுதான் எங்களது கவலை. காவிரி ஆற்றில் ஏற்கனவே மாசு அதிகரித்துள்ளது.
இதனால், ஆற்றில் அஸ்தியை கரைக்க தடை விதிப்பதுடன், அவற்றை பாதுகாக்க திட்டம் வகுக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
இதையடுத்து மனு மீதான விசாரணையை, செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் மனு தொடர்பாக, பதில் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

