குமாரசாமிக்கு எதிரான நோட்டீசுக்கு தடை மகளிர் கமிஷன் தலைவிக்கு ஐகோர்ட் 'குட்டு'
குமாரசாமிக்கு எதிரான நோட்டீசுக்கு தடை மகளிர் கமிஷன் தலைவிக்கு ஐகோர்ட் 'குட்டு'
ADDED : ஏப் 20, 2024 05:07 AM

பெங்களூரு, : வாக்குறுதி திட்டத்தால் பெண்கள் வழி தவறுவதாக, முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசியதற்கு, மாநில மகளிர் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தடை விதித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், அதிகாரத்தை மீறி செயல்படுவதாக, மாநில மகளிர் கமிஷன் தலைவிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் துமகூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட குமாரசாமி, 'காங்கிரசின் வாக்குறுதி திட்டத்தால், பெண்கள் வழிதவறி செல்கின்றனர்' என பேசினார்.
இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து குமாரசாமி மன்னிப்பும் கேட்டார். அதேவேளையில், மாநில மகளிர் கமிஷன் தலைவி நாகலட்சுமி, குமாரசாமிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில், குமாரசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குமாரசாமி தரப்பில் வழக்கறிஞர் நிஷாந்த் வாதிடுகையில், ''குமாரசாமி பேசியதற்கு, ஊடகத்தினர் முன் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், தானாக முன்வந்து மாநில மகளிர் கமிஷன் தலைவி வழக்கு பதிவு செய்து, விளக்கம் கேட்டு குமாரசாமிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்,'' என்றார்.
நீதிபதி நாகபிரசன்னா, ''குமாரசாமிக்கு வழக்கப்பட்ட நோட்டீசுக்கு, விசாரணை முடியும் வரை தடை விதிக்கப்படுகிறது. அதே வேளையில், குமாரசாமிக்கு நோட்டீஸ் அனுப்பும் முன், சம்மன் அனுப்பவில்லை, விளக்கம் கேட்கவில்லை.
''ஆனால், நேரடியாக நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்கிறது. தனது அதிகாரத்தை எல்லை மீறி பயன்படுத்துகிறார். எனவே, இதற்கு விளக்கம் அளிக்க மகளிர் கமிஷன் தலைவிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்,'' எனஉத்தரவிட்டார்.

