ADDED : செப் 14, 2024 10:51 PM

பாலக்காடு:கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆடல், பாடல், விளையாட்டு, விருந்து என, மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு ஆலாமரம் கொல்லப்புரை பகுதி மக்கள் பல்வேறு போட்டிகள் நடத்தினர்.
மாலை 3:30 மணியளவில் உணவு போட்டி நடந்தது. இதில், பங்கேற்றவர்கள் போட்டி போட்டு இட்லி சாப்பிட்டனர்.
அப்போது தொண்டையில் இட்லி சிக்கி அப்பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், 50, மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை வாளையார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வாளையார் போலீசார் விசாரிக்கின்றனர். தொண்டையில் இட்லி சிக்கி, மூச்சுக்குழாயிலும் அடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம்.
பிரேத பரிசோதனைக்கு பிறகே, இறப்புக்கான முழு காரணம் தெரியும் என, போலீசார் தெரிவித்தனர்.