வட்டவடை ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதே நோக்கம் சிலந்தியாறு தடுப்பணை குறித்து இடுக்கி கலெக்டர் விளக்கம்
வட்டவடை ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதே நோக்கம் சிலந்தியாறு தடுப்பணை குறித்து இடுக்கி கலெக்டர் விளக்கம்
ADDED : மே 25, 2024 02:42 AM
மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் சிலந்தியாற்றின் குறுக்கே ஒரு மீட்டர் உயரத்தில் தடுப்பணை மட்டும் கட்டுவதாக இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் விளக்கமளித்துள்ளார்.
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களும், ஆதரவு தெரிவித்து வட்டவடை ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் களம் இறங்கியுள்ளனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் நேற்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: வட்டவடை ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகிறது.
கேரள குடிநீர் வாரியம் சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தில் உட்படுத்தி பணிகள் நடக்கின்றன. அதன் மூலம் வட்டவடை வடக்கு, தெற்கு, பழத்தோட்டம், சிலந்தியாறு, கூடலார்குடி, சாமியார்விளகுடி மக்கள் பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
வட்டவடை ஊராட்சியில் சிலந்தியாறு மட்டும் வற்றாத நீர் ஆதாரமாகும். அதில் தடுப்பணை கட்டி கருப்பசாமி கோயில் அருகே அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து அங்கிருந்து ஊராட்சியில் முதற்கட்டமாக 617 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1450 மீட்டர் முதல் 2695 மீட்டர் உயரத்தில் வட்டவடை ஊராட்சி உள்ளது. இருப்பினும் ஊராட்சியில் வற்றாத ஆறு உள்பட நீர்நிலைகள் இல்லை. நிலத்தடி நீரும் போதிய அளவில் இல்லை என்பதால் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண அரசு முயன்று வருகிறது.
அதன்படி சிலந்தியாற்றின் குறுக்கே ஒரு மீட்டர் உயரத்தில், 45 மீட்டர் நீளத்தில் தடுப்பணை மட்டும் கட்டப்படுகிறது. அதனை அணைக்கட்டு என்பது தவறு. திட்டத்திற்கு தலைமை செயலாளர் தலைமையிலான தொழில்நுட்ப குழு, தேசிய மிஷன் ஒப்புதல் அளித்தனர். திட்ட பணிகளும் முறையாக டெண்டர் விடப்பட்டு கட்டுமானம் துவங்கப்பட்டன. கட்டுமானம் தடைபட்டால் திட்டத்தை கைவிடும் சூழல் ஏற்படும். அதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

