'பிரஜ்வல் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்கட்டும்'
'பிரஜ்வல் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்கட்டும்'
ADDED : மே 19, 2024 12:36 AM

பெங்களூரு: “பிரஜ்வல் தவறு செய்திருந்தால், சட்டப்படி தண்டனை வழங்கட்டும். இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை,” என, ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன். இவர் சமீபத்தில் பாலியல் வழக்கில் சிக்கினார். இது குறித்து தேவகவுடா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர், வீட்டை விட்டு வெளியில் வரவும் இல்லை. கட்சியினர் அவரது வீட்டுக்கே சென்று பார்த்து வந்தனர்.
இந்நிலையில், தேவகவுடாவுக்கு நேற்று 92வது பிறந்த நாள். கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த பின், முதன்முறையாக தன் பேரன் பிரஜ்வல் குறித்து தேவகவுடா அளித்த பேட்டி:
பிரஜ்வல் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டனை வழங்கட்டும். இதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதற்கு அரசு தகுந்தநடவடிக்கை எடுக்கட்டும்.
பிரஜ்வல் வெளிநாடு சென்றுள்ளார். அது தொடர்பாக குமாரசாமியும் விளக்கம் அளித்துள்ளார். குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்; அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

