சித்தராமையாவை மாற்றினால்... அஹிந்தா அமைப்பினர் எச்சரிக்கை
சித்தராமையாவை மாற்றினால்... அஹிந்தா அமைப்பினர் எச்சரிக்கை
ADDED : ஜூலை 01, 2024 09:15 PM
தார்வாட் : 'முதல்வர் சித்தராமையாவை மாற்றினால், மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்' என, அஹிந்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹூப்பள்ளியில் அஹிந்தா அமைப்பு மாநிலத் தலைவர் பிரபுலிங்க தோதானி தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், ஆகஸ்ட் மாதம் அஹிந்தா அமைப்பு சார்பில் ஹூப்பள்ளி நேரு மைதானத்தில் முதல்வர் சித்தராமையா பிறந்த நாளை கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம், அஹிந்தா அமைப்பை உருவாக்கிய சித்தராமையாவின் பொது சேவைக்காக, கர்நாடகாவில் பல துறைகளில் சாதனை படைத்த 50 பேருக்கு 'சித்தராமையா அஹிந்தா ரத்னா விருது' வழங்க முடிவு செய்யப்பட்டது.
பின், மாநிலத் தலைவர் கூறியதாவது:
முதல்வர் மாற்றம் குறித்த கோரிக்கை எழுந்துள்ளது. முதல்வரை மாற்றினால், காங்கிரஸ் இருக்காது. ஐந்து ஆண்டுகள் அவரே முதல்வராக தொடர வேண்டும்.
நாங்கள் சித்தராமையாவுக்கு பின்னால் நிற்போம். இரண்டு நாட்களுக்கு முன்பு, சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுபோன்ற கருத்து ஆபத்தை உருவாக்கும்.
அனைத்து சமுதாயத்தின் மீதும் சுவாமிகள் பக்தி கொண்டவர். குறிப்பிட்ட சமுதாயத்துக்கு தான் கொடுக்க வேண்டும் என்றால், அது மத அச்சுறுத்தலாக இருக்கும்.
இதுபோன்ற கருத்துகளை சுவாமிகள் வெளியிடக்கூடாது. இது உட்கட்சி விவகாரம்.முதல்வரை மாற்றினால் மாவட்டம், தாலுகா அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.