மணப்பெண் ஓடி விட்டால் யார் தப்பு இந்துார் விவகாரம் குறித்து பா.ஜ., பதில்
மணப்பெண் ஓடி விட்டால் யார் தப்பு இந்துார் விவகாரம் குறித்து பா.ஜ., பதில்
ADDED : மே 13, 2024 02:20 AM

இந்துார்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள இந்துார் லோக்சபா தொகுதிக்கு இன்று தேர்தல் நடக்க உள்ளது.
'நோட்டா'
காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அக் ஷய் காந்தி பம், வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நேரத்தில், போட்டியில் இருந்து விலகினார். அதற்கடுத்த சில மணி நேரத்தில் பா.ஜ.,வில் இணைந்தார்.
இது, காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொகுதியில் காங்., வேட்பாளர் இல்லாத நிலையில், 'நோட்டா' எனப்படும், யாருக்கும் ஆதரவு இல்லை என்பதற்கு ஓட்டளிக்கும்படி, காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.
இது குறித்து, முதல்வர் மோகன் யாதவ் நேற்று கூறியுள்ளதாவது:
ஒட்டுமொத்த கிராமத்தையே அழைத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். கடைசி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டால், அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்?
அதுபோல தான், அவர் உங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர். கடைசி நேரத்தில் அவர் போட்டியில் இருந்து விலகினால், அதற்கு பா.ஜ.,வை எப்படி குற்றம் சொல்ல முடியும்.
இந்த ஆணவக் கூட்டணியினர், நோட்டாவுக்கு ஓட்டளிக்கும்படி கூறுகின்றனர். இவர்கள், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன், கடவுள் ராமர் அவதரித்தபோது பிறந்திருந்தனர்.
தவறு செய்ய வேண்டாம்
புத்திசாலித்தனம் இல்லாத இவர்கள், காவி உடை அணிந்து, துறவிபோல் வந்து, சீதையை அபகரிக்க முயன்றுள்ளனர். லட்சுமணன் கிழித்த கோட்டை அப்போது சீதை தாண்டி தவறு செய்தார்.
இந்துார் தொகுதி மக்கள் அதுபோன்ற ஒரு தவறை செய்துவிடக் கூடாது. எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நம்பி, லட்சுமண கோட்டை தாண்டி தவறு செய்து விட வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.