ADDED : ஏப் 01, 2024 07:02 AM

பெங்களூரு : பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், நகரில் உள்ள 'இ - கழிப்பறை'களை பெங்களூரு மாநகராட்சி மூடிவருவதாக தகவல் கிடைத்தது. ஆனால் எந்த கழிப்பறையும் மூடப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பெங்களூரில் 800க்கும் மேற்பட்ட பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், 200க்கும் மேற்பட்டவை, இ - கழிப்பறைகள்.
தற்போது நகரில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து உள்ளது. இதனால் இந்த கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன. மேலும், சில சாதாரண கழிப்பறைகளும் மூடப்பட்டு வருகின்றன.
இந்த கழிப்பறைகளுக்கு உடனடியாக தண்ணீர் சப்ளை செய்யுமாறு, அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாநகராட்சி தலைமை பொறியாளர் பிரவீன் லிங்கையா கூறுகையில், ''சில பகுதிகளில் தண்ணீர் பிரச்னை அதிகமாக உள்ளது. இதுபோன்ற இடங்களில் இ - கழிப்பறைகள் பராமரிப்புக்காக டேங்கர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. எந்த கழிப்பறையும் மூடப்படவில்லை,'' என்றார்.
பொதுக்கழிப்பறை மேலாளர் நவீன் குமார் சவுத்ரி கூறியதாவது:
பெங்களூரில் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. சாதாரண பொதுக் கழிப்பறை பகுதிகளுக்கு டேங்கர் மூலம், தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்துவதால், தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. மாநகராட்சியும், ஜல் மண்டலமும் நடவடிக்கை எடுத்தும், தண்ணீர் பிரச்னை தீரவில்லை.
இதனால் மாநகராட்சியின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. விரைவில் மழை பெய்து, இரண்டு மாதங்களுக்குள் பிரச்னை தீரும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

