ADDED : செப் 14, 2024 11:45 PM

பெங்களூரு : ''நாகமங்களா சம்பவம் தொடர்பாக பா.ஜ., அமைத்துள்ள உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் உண்மை இருந்தால் பரிசீலிப்போம்,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் நடந்த மோதல் சம்பவத்தை கண்டுபிடிக்க, உண்மை கண்டறியும் குழுவை, பா.ஜ., அமைத்தது.
இதுதொடர்பாக, பெங்களூரில் நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
நாகமங்களா சம்பவம் தொடர்பாக பா.ஜ., அமைத்துள்ள உண்மை கண்டறியும் குழு அளிக்கும் அறிக்கையில் உண்மை இருந்தால் பரிசீலிப்போம். தற்போது நாகமங்களா அமைதியாக உள்ளது.
அமைதி கூட்டம் நடத்த அறிவுறுத்தி உள்ளேன். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நாங்கள் விரும்பியபடி எதையும் செய்ய முடியாது. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அது நடக்கும். அவர்களுக்கு இதில் என்ன சந்தேகம் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.