ADDED : ஜூலை 07, 2024 03:28 AM

பிறந்த நாள், சுப நிகழ்ச்சிகளுக்கு சில மரக்கன்றுகள் நடுவதன் மூலம், சுற்றுச்சூழலில் அக்கறையை காட்டுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு, 'நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டு அறக்கட்டளை'யினர், சத்தமில்லாமல், வாசலில் வந்து மக்களின் விருப்பப்படி மரக்கன்றுகள் நட்டு, அவற்றை வளர்க்க, வேலியை அமைத்து, பசுமை புரட்சியை உருவாக்கி வருகின்றனர்.
பெங்களூரு என்றால், தற்போது தொழில்நுட்ப நகரம் தான். ஆனால், 1990ம் ஆண்டுகளில், 'பூங்காக்களின் நகரம்' என்று அழைக்கப்பட்டது.
எங்கெங்கும் பசுமை
எங்கு திரும்பினாலும், பசுமை தான் காட்சிக்கு தெரியும். மற்ற மாநிலங்களில் வசிப்போர், கோடை விடுமுறைக்காக, பெங்களூரு வருவர்.
இத்தகைய பெங்களூரில் விஜயநகரைச் சேர்ந்த பிரசன்னா, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டு பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வந்தார்.
இவரின் செயலை பார்த்த, அக்கம்பக்கத்தினரும், அவருடன் இணைந்து கொண்டனர். 1993 முதல் 'நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டு அறக்கட்டளை'யை துவக்கினர்.
கடந்த 30 ஆண்டுகளாக பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 'ஹசிரு தேரு' எனும் 'பசுமை தேர்' என்ற பெயரில், நான்கு சக்கர வாகனங்கள் மூலம், மரக்கன்றுகளை தேவையான இடங்களில் நட்டனர்.
மரங்களுக்கு பெயர்
இந்த வாகனத்தில் மா, பாதாம் உட்பட 150 வகையான மரக்கன்றுகள், நடவுக்கு தேவையான மண்வெட்டி உட்பட பல கருவிகள் இருக்கும். இதுமட்டுமின்றி, மரங்களில் உள்ள ஆணி, கம்பிகளையும் அகற்றுகின்றனர்.
சுப நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவாகவும், மரக்கன்றுகள் நட்டு, மரங்களுக்கு வீர மரணமடைந்த வீரர்களின் பெயர் சூட்டி உள்ளனர்.
உணர்வுபூர்வமாக அறக்கட்டளை தலைவர் பிரசன்னா கூறியதாவது:
கடந்த 1990 முதல் இதுவரை 16 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. பெங்களூரு மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நட்டு, அதற்கு தேவையான வேலி அமைத்துக் கொடுப்போம். செடி குறிப்பிட்ட அளவு வளர்ந்த பின், வேலியை அகற்றிவிடுவோம்.
ஏனெனில், முன்பு, வேலியை அகற்றாமல் இருந்ததால், மரம் வளர்வதில் பிரச்னை ஏற்பட்டது. வேலியை அகற்றிய பின், மரம் வேகமாக வளர்ந்தது.
சிலர், அவர்களின் வீடுகளின் முன் மரக்கன்று வைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். தற்போது, அரசு அலுவலகங்களிலும் மரக்கன்றுகள் நடுகிறோம்.
42 பேர்
பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திலும் பலா, தென்னை மரங்கள் நட்டு, இப்போது வளர்ந்துள்ளன. எங்கள் அறக்கட்டளையில், 42 பேர் உள்ளோம்.
இவர்கள் வித்யாரண்யபுரா, தனிசந்திரா, ஹெப்பால், சென்னபட்டணா, ராய்ச்சூர் உட்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
பிறந்த நாள், சுப நிகழ்ச்சிகள், விசேஷ தினங்களில், எங்களின் 99008 22922 என்ற மொபைல் போனில் தொடர்பு கொண்டால், உங்கள் வீட்டு முன், பசுமை தேர் வந்து நிற்கும்.
நீங்கள் கேட்கும் மரக்கன்றை, நீங்கள் விரும்பும் இடத்தில் நடுவோம். அதுமட்டுமின்றி, இதை நீங்கள் பராமரிக்க தேவையில்லை. நாங்களே பராமரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -