இந்தியா பிடிக்கவில்லை என்றால் போய் விடுங்கள் விக்கிபீடியாவுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
இந்தியா பிடிக்கவில்லை என்றால் போய் விடுங்கள் விக்கிபீடியாவுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
ADDED : செப் 06, 2024 01:55 AM
புதுடில்லி :விக்கிபீடியா மீது அவமதிப்பு வழக்கு தொடர டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் விக்கிபீடியா ஒரு இலவச கலைக்களஞ்சியம். ஆன்லைன் என்சைக்ளோபீடியா என்பர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விஷயங்கள் குறித்தும் அதில் தகவல் கிடைக்கும்.
பிரசார கருவி
யாரும் எதை பற்றியும் எழுதலாம்; யார் எழுதியதையும் திருத்தலாம்; தகவல் சரியானதா என்பதை சோதித்து அறிய அச்சிட்ட ஆதாரங்கள் இருந்தால் போதும் என்பது அதன் கொள்கை.
இன்றைய கணக்கில், 300 மொழிகளில் ஆறரை கோடிக்கு மேலான தகவல் தொகுப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.
ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல், சுருக்கமாக ஏ.என்.ஐ., எனப்படும் செய்தி நிறுவனம் குறித்த தகவலும் விக்கிபீடியாவில் உள்ளது.
'இந்த நிறுவனம் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிரசார கருவியாக செயல்படுகிறது' என, அதில் ஒரு குறிப்பு இடம் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் மதிப்பை கெடுக்கும் அந்த குறிப்பை சேர்த்தவர்கள் யார் என தெரிவிக்குமாறு, ஏ.என்.ஐ., கேட்டது. விக்கிபீடியா கண்டுகொள்ளவில்லை.
செய்தி நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. விக்கிபீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது; பதில் இல்லை.
கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர கோரிக்கை வைத்தது செய்தி நிறுவனம். நீதிபதி நவின் சாவ்லா விசாரித்தார். விக்கி தரப்பில் ஆஜரான வக்கீல், வேறு நாட்டில் இருந்து செயல்படுவதால் நிர்வாகிகளிடம் தகவல் கேட்டு பதில் அளிக்க தாமதம் ஆவதாக தெரிவித்தார். நீதிபதி அதை ஏற்கவில்லை.
கட்டுப்பாடு
“முன்பொரு வழக்கிலும் இப்படிதான் சொன்னீர்கள். உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால் போய்விடுங்கள். உங்கள் பிசினசை மூடவும், விக்கிபீடியாவுக்கு தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடுவேன்” என்று கூறி, விக்கி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்தார்.
விக்கிபீடியா தளத்துக்கு தினமும் மூன்று கோடி பேருக்கு மேல் தகவல் தேட வருகின்றனர். கணிசமான இந்தியர்கள் அதில் அடங்குவர். பொதுமக்கள் தரும் நிதியால் இயங்கும் இந்த தளத்துக்கு நன்கொடை வழங்க, மத்திய அரசு சமீபத்தில் கட்டுப்பாடு விதித்துள்ளது.