காவிரி நீர் வேண்டுமானால் ஓட்டு போடுங்கள்: சிவகுமார்
காவிரி நீர் வேண்டுமானால் ஓட்டு போடுங்கள்: சிவகுமார்
ADDED : ஏப் 18, 2024 05:02 AM

பெங்களூரு, : ''காவிரி தண்ணீர் வேண்டும் என்றால், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷுக்கு ஓட்டு போடுங்கள்,'' என, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை, துணை முதல்வர் சிவகுமார் மிரட்டி உள்ளார்.
பெங்களூரு ஆர்.ஆர்., நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், துணை முதல்வர் சிவகுமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த குடியிருப்பில் 2,510 வீடுகள் உள்ளன; அதில் 6,424 ஓட்டுகள் உள்ளன. உங்களுக்கு காவிரி நீர் தேவைப்படுகிறது. காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்றால், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை வெற்றி பெற செய்யுங்கள்.
நான் துணை முதல்வராக உள்ளேன். பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்பாசனத்துறை என்னிடம் உள்ளது. உங்கள் பிரச்னைக்கு முதல்வர் வீட்டிற்கு செல்ல வேண்டாம். என் வீட்டிற்கு வாருங்கள். நான் உதவி செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகுமார் பேசிய வீடியோவை, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்ட பா.ஜ., 'காவிரி நீர் வேண்டும் என்றால், எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என, அடுக்குமாடி குடியிருப்பாளர்களை துணை முதல்வர் மிரட்டுகிறார். சகோதரர்களின் போக்கிரிதனம் நாளுக்கு, நாள் அதிகரித்து உள்ளது. இவர்களுக்கு ஏப்ரல் 26ம் தேதி, தொகுதி மக்கள் ஆணி அடிப்பர்' என, கூறி உள்ளது.

