ADDED : மே 02, 2024 06:36 AM

கலபுரகி: “அரசியல் எனக்கு புதிது இல்லை,” என, கலபுரகி காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணா தொட்டமணி கூறினார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலை ஒட்டி, தொகுதி முழுதும் சுற்றி வந்துள்ளேன். அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் பற்றி, வீடு, வீடாக சென்று எடுத்துக் கூறி உள்ளோம். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மக்களும் எங்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்தனர். மத்தியில் 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், காங்கிரசின் 25 வாக்குறுதி திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
பிறந்த உடனே யாரும் அரசியல்வாதி ஆவது இல்லை. பா.ஜ., வேட்பாளர் உமேஷ் ஜாதவ் ஒரு முறை எம்.பி.,யாக இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு அரசியல் அனுபவம் குறைவு. எனக்கு 30 ஆண்டு அரசியல் அனுபவம் உண்டு. நேரடியாக தேர்தலில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எனக்கு அரசியல் புதிது இல்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் நிலவுகின்றன. கலபுரகி மாவட்டம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பின்னோக்கி சென்று விட்டது.
மத்திய அரசிடம் இருந்து, உமேஷ் ஜாதவ் நிதி வாங்கி வரவில்லை. எனது மாமனார் மல்லிகார்ஜுன கார்கே 50 ஆண்டுகளாக அரசியலில் உள்ளார். ரயில்வே அமைச்சராக இருந்தபோது, யாத்கிர், கலபுரகியில் புதிய ரயில் பாதைகளை துவக்கி வைத்து பணிகளை முடித்தார்.
தொழிலாளர் நல அமைச்சராக இருந்தபோது, கலபுரகியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டிக் கொடுத்தார். அவர் செய்த பணிகளே எனக்கு வெற்றி தேடித்தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

