ADDED : மார் 25, 2024 06:43 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் பா.ஜ., காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளும், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், எட்டு பெண் வேட்பாளர்களுக்கு 'சீட்' கொடுத்து உள்ளது.
கடந்த 1999 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் சோனியா, பல்லாரியிலும்; மார்கரேட் ஆல்வா கனராவில் இருந்தும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த 2004 லோக்சபா தேர்தலில் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆகிய கட்சிகள், பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
அதன் பின், நடந்த தேர்தல்களில், கர்நாடகாவில் இருந்து ஒரு பெண் மட்டுமே வெற்றி பெற்று வந்தார். கடந்த 2009 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வில் பல்லாரியில் போட்டியிட்ட ஸ்ரீராமுலுவின் தங்கை சாந்தா, எம்.பி.,யானார். அதனை தொடர்ந்து பா.ஜ.,வில் 2014, 2019 ல் உடுப்பி - சிக்கமகளூரில் ஷோபா வெற்றி பெற்றார். கடந்த 2019ல் மாண்டியாவில் சுயேச்சையாக சுமலதா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இதுவரை அறிவிக்கப்பட்ட பட்டியலில் பெங்களூரு தெற்கு - சவுமியா ரெட்டி; ஷிவமொகா - கீதா சிவராஜ்குமார்; தாவணகெரே - பிரபா மல்லிகார்ஜுனா; உத்தர கன்னடா - அஞ்சலி நிம்பால்கர்; பாகல்கோட் - சம்யுக்தா பாட்டீல்; சிக்கோடி - பிரியங்கா ஜார்கிஹோளி என ஆறு பேருக்கும்; பா.ஜ.,வில் பெங்களூரு வடக்கு - ஷோபா; தாவணகெரே - காயத்ரி சித்தேஸ்வர் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளன.
இம்முறை லோக்சபா தேர்தலில், அதிகளவில் பெண்கள் போட்டியிடுவர் என தெரிகிறது. இதில், யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
படங்கள்: ஷோபா, காயத்ரி சித்தேஸ்வர், சவுமியா ரெட்டி, பிரபா மல்லிகார்ஜுனா, அஞ்சலி நிம்பால்கர், கீதா சிவராஜ்குமார், சம்யுக்தா பாட்டீல், பிரியங்கா ஜார்கிஹோளி

