'லிவ் இன்' உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் தர வேண்டும்
'லிவ் இன்' உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் தர வேண்டும்
ADDED : ஏப் 06, 2024 11:44 PM

போபால்: 'லிவ் இன்' எனப்படும் சேர்ந்து வாழும் உறவு முறையில் தம்பதி பிரிந்தாலும், பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சில பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதில் அந்தப் பெண், பராமரிப்பு செலவு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு மாதம் 1,500 ரூபாய் பராமரிப்பு செலவு தர வேண்டும் என்று, அவரது துணைக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அந்த ஆண், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதைய நவீன வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும், லிவ் இன் என்பது சகஜமாகிவிட்டது.
இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவும் மாறிவிட்டது.
இந்த தம்பதி, நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உறவில் குழந்தையும் பிறந்துள்ளது.
சட்டப்பூர்வமாக திருமணம் செய்யாவிட்டாலும், அந்த பெண்ணுக்கு, அந்த ஆண், ஜீவனாம்சம் எனப்படும் பராமரிப்பு செலவு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த பிப்., மாதத்தில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, லிவ் இன் உறவில் உள்ளவர்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜீவனாம்சம் உள்ளிட்ட உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

