ஒடிசாவில் பா.ஜ., தனித்து போட்டி தொகுதி பங்கீடு இழுபறியால் அதிரடி
ஒடிசாவில் பா.ஜ., தனித்து போட்டி தொகுதி பங்கீடு இழுபறியால் அதிரடி
ADDED : மார் 23, 2024 12:55 AM

ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
இதனுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது.
ஆதரவு
ஒடிசாவில் நான்கு கட்டங்களாக லோக்சபா தேர்தலும், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தலும் நடக்கும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதன்படி, மொத்தமுள்ள 21 லோக்சபா தொகுதிகளுக்கு மே 13, 20 , 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.
அங்குள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கு மே 13 மற்றும் 20ம் தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு, பா.ஜ., மற்றும் பிஜு ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என நம்பப்பட்டது.
அது தொடர்பான பேச்சு இரு கட்சிகளின் உயர்மட்ட அளவில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இருப்பினும், தொகுதி பங்கீடு தொடர்பாக இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படாத நிலையில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து மாநில பா.ஜ., தலைவர் மன்மோகன் சமல் நேற்று கூறியுள்ளதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், தேசிய நலனில் உரிய அக்கறை வைத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு போதிய ஆதரவு வழங்கியுள்ளது. அதற்கு நன்றி.
இருப்பினும், மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் இங்குள்ள ஏழை மற்றும் அடிதட்டு மக்களுக்கு சேராமல் இருப்பது கவலையளிக்கிறது. ஒடிசாவின் அடையாளம், பெருமை மற்றும் மக்களின் நலன் தொடர்பான பல பிரச்னைகள் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ச்சி
இரட்டை இன்ஜினாக செயல்படும் அரசு உள்ள மாநிலங்களில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு மக்கள் நலன் தொடர்பான விஷயங்களும் மேம்பட்டுள்ளன. ஆனால், ஒடிசாவில் அது குறைவாகவே உள்ளது.
எனவே, ஒடிசாவின் நான்கரை கோடி மக்களின் தேவையை, விருப்பத்தை, ஆசையை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான வளர்ச்சி அடைந்த இந்தியா மற்றும் வளர்ந்த ஒடிசாவை உருவாக்கும் வகையில், வரும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 1998 - 2009 வரை இரு கட்சிகளும் இணைந்து தேர்தல்களை சந்தித்தன. அதன் பின் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தனித்தனியாகவே போட்டியிட்டன. ஆனாலும், பார்லிமென்டில் பா.ஜ.,வுக்கு பிஜு ஜனதா தளம் தொடர்ந்து ஆதரவு அளித்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களையும், பா.ஜ., எட்டு இடங்களையும் கைப்பற்றின. அதேபோல் கடந்த சட்டசபை தேர்தலில், பிஜு ஜனதா தளம் 110 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., 23 தொகுதிகளை கைப்பற்றியது.

